NATIONAL

கடும் வெப்பம் காரணமாகக் குவாமூசாங், நெங்கிரி ஆற்றில் நீர் மட்டம் குறைந்து வருகிறது

குவா மூசாங், மே 11- தொடர்ச்சியாக நீடித்து வரும் கடும் வெப்ப நிலை
காரணமாக இங்குள்ள நெங்கிரி ஆற்றில் நீர் மட்டும் வெகுவாக குறைந்து
வருகிறது. நீரின் அளவு குறைந்த காரணத்தால் ஆற்று நீர் சேறும் சகதியும்
கலந்து காணப்படுவதோடு ஆற்றின் அடியில் உள்ள மணல் திட்டுகளும்
பாறைகளும் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளன.

அந்த ஆறு வறண்டு வருவதை படகோட்டிகளும் மீனவர்களும் கடந்த
வாரம் முதல் உணரத் தொடங்கியதாகப் படகு ஓட்டியான முகமது ஃபாக்ரி
ஷாரிப் (வயது 27) கூறினார்.

கடந்த வாரம் முதல் அந்த ஆற்றில் நீர் மட்டம் இரண்டு மீட்டர் வரை
குறைந்துள்ளது. குறைவான நீரில் படகு ஓட்டுவதை சிரமமான காரியம்
என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். எனினும், மீனவர்கள் என்ற
முறையில் குடும்ப வருமானத்திற்காக நாங்கள் இந்த ஆற்றில்
பயணித்துதான் ஆக வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆற்றில் தங்கள் நடவடிக்கைகளை வழக்கம் போல்
மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த வறட்சி நிலை நீண்ட நாட்களுக்கு
நீடிக்காது என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

இங்குள்ள மக்கள் பால்மரம் வெட்டுவது மற்றும் விவசாயத்தைக்
கவனிப்பது தவிர்த்து உபரி வருமானத்திற்காக இந்த ஆற்றில் மீன்
பிடிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று பெர்னாமாவிடம்
அவர் சொன்னார்.

ஆற்றில் நீரோட்டம் குறைவதால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து பல
மீனவர்கள் தங்கள் தொழிலைத் தற்காலிமாக நிறுத்தியுள்ளதாக மற்றொரு
படகு ஓட்டுநரான ஷாரி முஸ்தாபா (வயது 55) தெரிவித்தார்.


Pengarang :