NATIONAL

மாநில அரசின் மலிவு விற்பனை ஆண்டு முழுவதும் தொடரப்பட வேண்டும்- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கிள்ளான், மே 12- அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான
விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் மாநில அரசின்
மலிவு விற்பனை பொது மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக
மாறி விட்டது.

இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் தாம் இதுவரை
ஆறு முறை பங்கு கொண்டுள்ளதோடு வீட்டிற்கு அருகில் நடைபெறும்
இத்தகைய மலிவு விற்பனைகளை ஒருபோதும் தவறவிட்டதில்லை என்று
தொழிற்சாலை ஊழியரான நுருள் நபிஷியா ஜாஸ்னி (வயது 21) கூறினார்.

நேரம் கிடைக்கும் பட்சத்தில் இத்தகைய மலிவு விற்பனை நடைபெறும்
இடங்களுக்கெல்லாம் நான் சென்றுவிடுவேன். இந்த நோக்கத்திற்காக நான்
சென்ற அதிக தொலைவான இடம் என்றால் அது பண்டமாரான்தான்.
இங்கு பொருள்களை வாங்குவதற்கு என் தாயாருடன் வந்தேன் என்று
அவர் சொன்னார்.

நேற்று இங்கு நடைபெற்ற கோலக் கிள்ளான் தொகுதி நிலையிலான
மலிவு விற்பனையில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, மாநில அரசின் இந்த மலிவு விற்பனைக்கு தாம்
இப்போதுதான் முதன் முறையாக வந்துள்ளதாக தாதியாக பணிபுரியும்
இந்தான் நுருள் அப்துல் ரஹ்மான் (வயது 31) குறிப்பிட்டார்.

இத்தகைய மலிவு விற்பனைத் திட்டம் அமலில் உள்ளது உண்மையில்
எனக்குத் தெரியாது. இந்த விற்பனை குறித்து கேள்விப்பட்டு என்
கணவருடன் இங்கு வந்தேன். இந்த விற்பனையில் உண்மையாகவே
பொருள்கள் குறைவான விலையில் கிடைக்கின்றன என்று அவர்
சொன்னார்.

நேரம் கிடைக்கும் பட்சத்தில் அடுத்து நடைபெறும் இத்தகைய மலிவு
விற்பனைகளில் நான் நிச்சயமாக கலந்து கொள்வேன். குடும்பச்
செலவினத்தைக் குறைக்க இந்த திட்டம் பெரிதும் உதவும் என்றார் அவர்.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும்

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி
கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் கெம்போங் மீன் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ
சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :