SELANGOR

சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் கோலக் கிள்ளான் தொகுதியில் 40 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படும்

கிள்ளான், மே 12- சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் கோலக்
கிள்ளான் தொகுதியில் உள்ள சில கிராமங்களில் சூரிய ஒளியில்
இயங்கும் சுமார் 40 சோலார் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.

இந்த திட்டத்தில் கம்போங் பண்டமாரான் ஜெயா, தாமான் டத்தோ சானாட்
உள்ளிட்ட நான்கு குடியிருப்புப் பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி
கூறினார்.

இப்பகுதிகள் தவிர்த்து கம்போங் பெரிகி நெனாஸ் இஸ்லாமிய மையத்துக்
கொல்லை மற்றும் கம்போங் பெண்டாமார் விளையாட்டு பூங்கா ஆகிய
பகுதிகளிலும் இந்த விளக்குளைப் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
அவர் சொன்னார்.

பொது மக்களின் வசதிக்காக இப்பகுதிகளில் இந்த விளக்குகளைப்
பொருத்துகிறோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்பகுதி மக்களுக்கு
இந்த விளக்குகள் அவசியம் தேவைப்படுகின்றன என்று அவர்
குறிப்பிட்டார்.

சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் 2023ஆம் ஆண்டு வரவு செலவுத்
திட்டத்தில் 2 கோடியே 80 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுவதாக மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பட்ஜெட் தாக்கலின் போது
தெரிவித்திருந்தார்.

பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறு
திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் வட்டாரப் பொருளாதாரத்தை
மேம்படுத்தும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர்
அறிவித்தார்.


Pengarang :