NATIONAL

மூன்றாம் படிவ மாணவர் ஐந்தாம் படிவ மாணவர்களால் தாக்கப்பட்டார்

ஷா ஆலம், மே 12: அம்பாங்கில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் படிவ மாணவரை ஐந்தாம் படிவ மாணவர்கள் கும்பலாகச் சேர்ந்து தாக்கியுள்ளனர். மூத்த மாணவரை மதிக்கவில்லை என்ற காரணத்தால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவரின் நெற்றி, தலை, இடது புருவம், தாடை, கழுத்தின் பின்புறம் ஆகியப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அம்பாங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.

“மே 8 அன்று காலை 9.30 மணியளவில் (எஸ்எம்கே) தாமான் மெலாவதி இடைநிலைப்பள்ளியில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஐந்தாம் படிவ ஆண் மாணவர் ஒருவர் பாதிக்கப்பட்ட மாணவர் படிக்கட்டில் இருந்தபோது அவரை மார்பில் குத்தி கழுத்தை நெரித்து பின் முதுகில் உதைத்துள்ளார்.

“அதன்பின் பிற்பகல் 3 மணி அளவில் பாதிக்கப்பட்ட மாணவரைப் புக்கிட் மார் மார் கெமென்சாவிற்கு அழைத்து வந்து ஐந்து சந்தேக நபர்கள் தாக்கியுள்ளனர்” என்று உதவி ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக் கூறினார்.

குற்றவியல் சட்டப் பிரிவு 323 இன் கீழ் அனைத்து சந்தேக நபர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது RM2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மூத்த மாணவர் குழுவால் தாக்கப்படாமல் தன்னைத் தற்காத்து கொள்ள முயலும் வகையில் பாதிக்கப்பட்டவர் படுத்துக் கொண்டிருந்ததைக் காட்டும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானது.

அதில் சந்தேக நபர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட மாணவரின் தலையிலும் உடலிலும் பலமுறை குத்தினார்.


Pengarang :