SELANGOR

பந்தாய் சிப்பாங் புத்ராவில் நடைபெற்ற மலிவு விற்பனையில் 200 பேர் பங்கேற்பு- கவுன்சிலர் விஜயராணி தகவல்

சுங்கை பீலேக், மே 15- இங்குள்ள பந்தாய் சிப்பாங் புத்ரா சமூக
மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசின் ஜெலாஜா
ஏசான் மலிவு விற்பனையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சுங்கை பீலேக் சட்டமன்றத் தொகுதியின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த
மலிவு விற்பனையில் இந்தியர்கள் கணிசமான அளவு பங்கேற்று
பயனடைந்ததாகச் சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர் திருமதி
விஜயராணி ஆறுமுகம் கூறினார்.

இந்த மலிவு விற்பனையின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட நீரை சிக்கனமாகப்
பயன்படுத்துவது தொடர்பான விளக்கமளிப்புக் கூட்டம் மற்றும் ஆயர்
சிலாங்கூர் நிறுவனத்தின் இலவசக் குடிநீர்த் திட்டத்திற்கான பதிவு
ஆகியவற்றில் சுமார் 150 பேர் வரை கலந்து கொண்டதாக அவர்
சொன்னார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டச் சிறார்களை உற்சாகப்படுத்தும் நோக்கில்
வர்ணம் தீட்டும் போட்டி, அதிர்ஷ்டக் குலுக்கு போன்ற நிகழ்வுகளுக்கும்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்விரு நிகழ்வுகளிலும் அதிகமான இந்தியர்கள் கலந்து கொண்டனர்.
மாநில அரசு அமல்படுத்தியுள்ள இத்தகைய மக்கள் நலத் திட்டங்களுக்கு
பெரிதும் பயனுள்ளதாக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர் என்று
விஜயராணி மேலும் தெரிவித்தார்.

இந்த மலிவு விற்பனையை நடத்துவதற்கான ஏற்பாட்டைச் செய்த சுங்கை
பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு மற்றும் தொகுதி சேவை மைய
பொறுப்பாளர்கள் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழக (பி.கே.பி.எஸ்.)
நிர்வாகத்தினர் மற்றும் ஆயர் சிலாங்கூர் நிறுவன அதிகாரிகளுக்குத் தாம்
நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

மாநில அரசின் இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00
வெள்ளிக்கும், ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும்
கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல்
எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும்
விற்கப்படுகிறது.


Pengarang :