NATIONAL

அனைத்துலகப் புத்தாக்கக் கண்காட்சியில் ஈபோர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

ஷா ஆலம், மே 16- அறிவாற்றல் மேம்பாட்டிலும் புத்தாக்கத்திலும் மற்ற
மொழி மாணவர்களுக்கு இணையான திறனை தமிழ்ப்பள்ளி
மாணவர்களும் கொண்டுள்ளனர் என்ற உண்மை உலக அரங்குகளில் பல
முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அண்மையில் தலைநகரில் நடைபெற்ற 34வது
ஐடெக்ஸ்‘23 அனைத்துலக புத்தாக்கக் கண்காட்சியில் பதக்கங்களை
வென்றதன் மூலம் சாதனைகளை நிகழ்த்துவதில் தமிழ்ப்பள்ளி
மாணவர்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற உண்மையை இங்குள்ள
ஈபோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மறுபடியும் நிரூபித்துள்ளனர்.

கோலாலம்பூரிலுள்ள கே.எல்.சி.சி மாநாட்டு மையத்தில் இம்மாதம் 11
மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் இரு தங்கம்
ஏழு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்பதக்கங்களை ஈபோர் தமிழ்ப் பள்ளி
வென்றதாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பன்னீர்
செல்வம் பழனியாண்டி கூறினார்.

மொத்தம் 19 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த
கண்காட்சியில் பத்து கேவ்ஸ், காஜாங் மற்றும் ஈபோர் ஆகிய மூன்று
தமிழப்பள்ளிகள் பங்கு கொண்டதாக அவர் சொன்னார்.

உணவு, மருந்து, அறிவியல் மற்றும் புதிய தொழில்நுட்பக்
கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தும் இந்த அனைத்துலக கண்காட்சியில்
வாழைப்பழத் தோலில் சிப்ஸ் மற்றும் அலோவீராவைக் கொண்டு ஜாம்
ஆகியவற்றைத் தயாரிக்கும் முறையை செய்து காட்டியதற்காக இப்பள்ளி
இரு தங்கப்பதக்கங்களைப் பெற்றது என்றார் அவர்.

இந்த வருடாந்திர நிகழ்வில் ஈபோர் தமிழ்ப்பள்ளி கடந்த ஐந்தாண்டுகளாகத்
தொடர்ச்சியாகப் பங்கேற்று வருவதாகக் கூறிய அவர், இம்முறை 50 மாணவர்களைக் கொண்ட பத்து குழுக்களை இப்போட்டிக்கு அது அனுப்பியது என்றார்.

மாணவர்களின் இந்த சாதனைக்குப் பெரும் துணையாக இருந்து வரும்
பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. பி.சிவமலர், ஆசிரியர்கள்,
பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகக் குழுவினர், பள்ளி வாரிய
பொறுப்பாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்குத் தாம் நன்றி தெரிவித்துக்
கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :