NATIONAL

மாநில அரசின் மலிவு விற்பனைக்கு மலேசியச் சாதனைப் புத்தகத்தில் இடம்

ஷா ஆலம், மே 16- நோன்புப் பெருநாளின் போது இரு தினங்களுக்குக்
கோழி மற்றும் முட்டையை உட்படுத்திய மானிய விலை மலிவு
விற்பனையை மிகப்பெரிய அளவில் நடத்தியதற்காக மலேசியத் சாதனைப்
புத்தகத்தின் அங்கீகாரத்தை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக்
கழகம் (பி.கே.பி.எஸ்.) பெற்றுள்ளது.

கடந்த மாதம் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெற்ற ஏசான்
அய்டில்பித்ரி மாபெரும் மலிவு விற்பனையின் போது 30,000 கோழிகளும்
10,712 தட்டு முட்டைகளும் விற்கப்பட்டதாகப் பி.கே.பி.எஸ். குழுமத்தின்
தலைமைச் செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது
ராஸி கூறினார்.

இந்த ஏசான் அய்டில்பித்ரி மாபெரும் மலிவு விற்பனை இத்திட்டத்தின்
பிரதான பங்கேற்பாளரான பி.கே.பி.எஸ். மற்றும் ஃபாமா எனப்படும்
கூட்டரசு விவசாய சந்தை வாரியம், கோஹிஜ்ரா எனும் கோப்பராசி வர்கா
ஹிஜ்ரா சிலாங்கூர் பெர்ஹாட் ஆகிய தரப்பினருடன் ஒத்துழைப்புடன்
மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தைப் பி.கே.பி.எஸ். தொடக்கியது
முதல் அதிக அளவில் பொருள்கள் விற்கப்பட்டது இதுவே முதன்
முறையாகும். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இந்த விற்பனைத் திட்டம்
மக்களுக்கு உரிய பலனைத் தந்துள்ளது இதன் மூலம்
நிரூபணமாகியுள்ளது என்று அவர் சொன்னார்.

இங்குள்ள விஸ்மா பி.கே.பி.எஸ்.சில் நேற்று நடைபெற்ற ஜெலாஜா ஏசான்
ராக்யாட் திட்டத்திற்கு மலேசிய சாதனைப் புத்தகத்தின் அங்கீகாரம்
வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து
கொண்டார்.


Pengarang :