NATIONAL

குழந்தை சித்ரவதை சம்பவத்தில் பெண் ஒருவர் கைது

ஜொகூர் பாரு, மே 16: சமீபத்தில் முதியாரா ரினியில் உள்ள மழலையர் காப்பகத்தில் குழந்தை ஒன்று சித்ரவதை செய்த வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக 21 வயதான உள்ளூர் பெண் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

ஸ்கூடாய், செலெசா ஜெயாவில் இன்று அதிகாலை 2 மணியளவில் அந்தப் பெண் இஸ்கண்டார் புத்ரி காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவினால் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் தெரிவித்தார்.

“நேற்று, ஜொகூர் காவல்துறை, சமூக ஊடகங்களில் 48 வினாடிகள் மற்றும் 39 வினாடிகள் நீடித்த இரண்டு வைரல் வீடியோக்களில் ஒரு பெண் குழந்தையைச் சித்ரவதை செய்வதைக் கண்டறிந்தது.

“இச்சம்பவத்தில் 11 மாத பெண் குழந்தை ஒன்றும், ஒன்பது மாத ஆண் குழந்தை ஒன்றும் சம்பந்தப்பட்டு இருப்பதாக விசாரணையின் முடிவில் கண்டறியப்பட்டது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், இந்த மழலையர் காப்பகம் சட்டவிரோதமாக இயங்கி வருவதாக கூறினார்.

ஜொகூர் பாரு நீதிமன்றத்தில் அந்த பெண்ணைக் காவலில் வைக்க இன்று விண்ணப்பம் செய்யப்படும் என்றார்.

குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (A) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிக பட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது RM20,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.

சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தால் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் லாவண்யாவை 019-8822403 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு பொதுமக்களை வரவேற்கிறார் கமருல் ஜமான்.

– பெர்னாமா


Pengarang :