NATIONAL

சீ போட்டி விளையாட்டில் மலேசியா 34 தங்கம், 45 வெள்ளி மற்றும் 97 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே பெற்றது

புனோம் பென், மே 17: கம்போடியாவில் நடைபெற்ற சீ போட்டி விளையாட்டில் 40 தங்கப் பதக்கங்கள் பெற வேண்டும் என்ற இலக்கை அடைய முடியாமல் ஏழாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் மலேசியக் குழு மீண்டும் அப் போட்டி விளையாட்டு வரலாற்றில் மிக மோசமான செயல் திறனைப் பதிவு செய்தது.

சீ போட்டி விளையாட்டின் 32வது பதிப்பில் நாட்டின் செயல்திறன் மிகவும் ஏமாற்றமளித்தது. கடந்த ஆண்டு வியட்நாம் ஹனோயில் இதே போட்டி விளையாட்டு நடைபெற்ற போது இன்னும் மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அணியினர் 34 தங்கம், 45 வெள்ளி மற்றும் 97 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே சேகரித்து ஒட்டுமொத்தமாக ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மலேசியா கடந்த முறை  ஹனோயில் 39 தங்கம், 45 வெள்ளி மற்றும் 90 வெண்கலத்துடன் ஒட்டுமொத்தமாக ஆறாவது இடத்தை கைப்பற்றியது.

676 விளையாட்டாளர்களை கொண்ட மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியாவை விட கீழ் நிலையில் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

நேற்றைய போட்டியில் மலேசியா, நடன வீரர் சாம் ஜீ லெக், ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் மற்றும் கிக் குத்துச்சண்டை வீராங்கனை அஹ்மத் நோர் இமான் ஹக்கிம் ரகிப் மூலம் நான்கு தங்கப்பதக்கங்களை சேர்த்தது.

போட்டியின் 11வது நாள் முடிவில், வியட்நாம் 136 தங்கம், 105 வெள்ளி, 114 வெண்கலம் பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த வெற்றியாளராக வாகை சூடியது. மேலும், தாய்லாந்து 108-95-108 என்ற பதக்க எண்ணிக்கையுடன் இரண்டாவது இடத்தையும், இந்தோனேசியா 85-81-109 என்ற பதக்க எண்ணிக்கையுடன்  மூன்றாவது இடத்தையும் பிடித்தன

போட்டியை நடத்தும் கம்போடியா 81-74-126  பதக்க எண்ணிக்கையுடன்  நான்காவது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 58-86-116 பதக்க எண்ணிக்கையுடன்  ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் 51-42-64 என்ற பதக்க எண்ணிக்கையுடன்  ஆறாவது இடத்திலும் உள்ளன.

– பெர்னாமா


Pengarang :