NATIONAL

நாடு முழுவதும் கழிவுநீர்த் திட்டத்தை மேற்கொள்ள வெ.170 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் நிக் நஸ்மி தகவல்

கோலாலம்பூர், மே 17- நாடு முழுவதும் கழிவுநீர்த் திட்டங்களை
மேற்கொள்வதன் மூலம் நீடித்த அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக
12வது மலேசியத் திட்டத்தின் மூன்றாவது சூழல் திட்டத்தின் கீழ் மத்திய
அரசு 170 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

அடிப்படை கழிவுநீர் திட்டங்களை நவீனப்படுத்துவதற்கும்
மலேசியர்களுக்கு தரமான கழிவுநீர் அகற்றும் சேவையை
வழங்குவதற்கும் ஏதுவாக இந்த நிதி ஒதுக்கப்படுவதாக இயற்கை வளம்,
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் நிக் நஸ்மி
நிக் அகமது கூறினார்.

தற்போது பெரிய நகரங்களில் கழிவுநீர்ச் சேவை 85.4 விழுக்காடு
பூர்த்தியடைந்துள்ள வேளையில் 12வது மலேசியத் திட்டத்தின் கீழ் வரும்
2025ஆம் ஆண்டிற்குள் சேவைத் தரத்தை 90 விழுக்காடாக உயர்த்த
தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் கழிவுநீர் சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் உரிய
பயனளிக்காத மற்றும் அதிக செலவினத்தை ஏற்படுத்தக்கூடிய
திட்டங்களை மறுசீரமைப்பது மற்றும் சிறிய அளவிலான கழிவு நீர்
சுத்திகரிப்பு மையங்களை மூடுவது ஆகிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

வெளியேற்றப்படும் கழிவு நீர் சுற்றுச்சூழலின் விதிமுறைகளுக்கு
உட்பட்டதாகக் குறிப்பாக நீர் வளங்களை மாசுபடுத்தாமலிருப்பதை உறுதி
செய்வதற்கு இத்தகைய நடவடிக்கைகளை அவசியம் மேற்கொள்ள
வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்கு நடைபெற்ற 2023 டிரெஞ்லெஸ் ஆசியா மாநாட்டிற்கு
வழங்கிய உரையில் அமைச்சர் இவ்வாறு கூறினார். அவரின் உரையை கழிவு நீர் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் வான் அப்துல் ரஹிம் வான் அப்துல்லா வாசித்தார்.


Pengarang :