NATIONAL

“சித்தம்“ ஏற்பாட்டிலான உணவு கையாளும் பயிற்சியில் 50 பேர் பங்கேற்பு- இலவசமாக டைபாய்டு தடுப்பூசியும் பெற்றனர்

ஷா ஆலம், மே 17- “சித்தம்“ எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில்
ஆர்வலர் மையத்தின் ஏற்பாட்டிலான உணவு கையாளுதல் மற்றும்
டைபாய்டு தடுப்பூசி வழங்கும் பயிற்சித் திட்டத்தில் உணவு விற்பனைத்
துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஒரு நாள் பயிற்சியை யாயாசான்
ஹிஜ்ரா அறவாரியத்தின் இடைக்கால தலைமைச் செயல்முறை அதிகாரி
நோர்மிஸா யாஹ்யா முடித்து வைத்து பங்கேற்பாளர்களுக்கு
நற்சான்றிதழ்களை வழங்கினார்.

“சித்தம்“ அமைப்பின் வாயிலாக யாயாசான் ஹிஜ்ரா ஏற்பாடு செய்த இந்த
நிகழ்வுக்கு இந்திய சமூகத்திடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்துள்ளதாக
நோர்மிஸா கூறினார்.

உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் சுத்தமான மற்றும் தரமான
வகையில் உணவைத் தயாரிப்பதற்குரிய வழிகாட்டுதலை இந்த பயிற்சி
வழங்கும் அதே வேளையில் டைபாய்டு தடுப்பூசியைப் பெறுவதன் மூலம்
தைரியமாக வர்த்தகத்தை நடத்துவதற்குரிய வாய்ப்பையும் அவர்கள்
பெறுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த நிகழ்வு குறித்து பேசிய சித்தம் நிர்வாகி எஸ்.
கென்னத் சேம், இந்த பயிற்சியின் மூலம் பங்கேற்பாளர்கள் இரண்டு வித
பலன்களைப் பெற்றதாகச் சொன்னார்.

உணவுத் தொழிலில் ஈடுபட்டவர்கள் செய்ய வேண்டிய மற்றும்
செய்யக்கூடாத விஷயங்கள் குறித்தும் பாதுகாப்பான முறையில் உணவு
தயாரிக்கும் வழிமுறைகள் குறித்தும் இந்த பயிற்சியில் கலந்து
கொண்டவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது.

அதோடு மட்டுமின்றி நிகழ்வின் பங்கேற்பாளர்களுக்கு இலவசமாக
டைபாய்டு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசியை வெளியில்
பெறுவதாக இருந்தால் 90 வெள்ளி முதல் 100 வெள்ளி வரை செலுத்த
வேண்டி வரும். ஆனால் இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களின்
வசதிக்காக இந்த தடுப்பூசிக்கு உண்டான செலவை மாநில அரசே ஏற்றுக்
கொண்டது என்றார் அவர்.

உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகவும் பயன் தரக்கூடிய
இத்தகைய பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தாங்கள்
திட்டமட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :