SELANGOR

பாயா ஜெராஸ் எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் ஞாயிறன்று இலவச மருத்துவப் பரிசோதனை

ஷா ஆலம், மே 17- சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் இரண்டாம் கட்ட
இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் மறுபடியும் வார இறுதி
நாட்களில் நடைபெறவுள்ளது. இதன் முதலாவது பரிசோதனை இம்மாதம்
21ஆம் தேதி பாயா ஜெராஸ், எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில்
நடைபெறவிக்கிறது.

காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் இந்த
மருத்துவப் பரிசோதனை இயக்கத்தில் சுற்றுவட்டார மக்கள் பங்கு
கொண்டு பயனடையுமாறு பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கேட்டுக் கொண்டார்.

இரத்த, சிறுநீர்ப் பரிசோதனை மற்றும் நான்கு வித புற்று நோய்ச்
சோதனைகள் மட்டுமின்றி, கண், பல், காது மற்றும் பிஸியோதெராபி
சோதனைகளையும் இங்கு மேற்கொள்ள முடியும் என்று அவர் சொன்னார்.
கடந்தாண்டு மேற்கொள்ளப்பட் சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் மூலம்
மாநிலத்திலுள்ள சுமார் 58,000 பேர் பயனடைந்ததாக அவர் மேலும்
தெரிவித்தார்.

இந்த முதல் கட்ட சிலாங்கூர் சாரிங் பரிசோதனையின் போது கர்ப்பப்பை
வாய்ப் புற்றுநோய் பரிசோதனையை செய்து கொண்ட 565 பேரில் 34 பேர்
தொடர் சோதனைகளை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டதாக அவர்
குறிப்பிட்டார்.

அதே போல், புரோஸ்டெட் புற்று நோய் சோதனையை மேற்கொண்ட 117
ஆண்களில் 16 அல்லது பத்து விழுக்காட்டினருக்கு மேல் சிகிச்சைப் பெற
வேண்டி வந்தது என்றார் அவர். நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கு ஏதுவாக இத்தகைய மருத்துவப் பரிசோதனை இயக்கங்களில் பங்கேற்குமாறு பொது மக்களை தாம் கேட்டுக் கொள்வதாக அவர் சொன்னார்.

உடல் பருமனானவர்கள், நோய்ப் பின்னணி உள்ள குடும்பங்களை
சேர்ந்தவர்கள் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையைக்
கடைபிடிக்காதவர்களை இலக்காக கொண்டு 34 லட்சம் வெள்ளி நிதி
ஒதுக்கீட்டில் சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத்
திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியது.


Pengarang :