SELANGOR

பணி நிறுத்த உத்தரவை மீறி இ.சி.ஆர்.எல். இரயில் திட்டம்- உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் நடவடிக்கை

ஷா ஆலம், மே 23- செரெண்டா, டேசா அங்கிரிக் மற்றும் டேசா மெலோர்
அருகே மேற்கொள்ளப்படும் கிழக்குக் கரை இரயில் திட்ட (இ.சி.ஆர்.எல்.)
பகுதியை உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் கடந்த 18ஆம் தேதி
முற்றுகையிட்டது.

பணி நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட
நிறுவனம் அப்பகுதியில் தொடர்ந்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு
வரும் காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நகராண்மைக்
கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

மண்ணைத் தோண்டுவது சமன் செய்வது, தொழிலாளர்களுக்காக புதிய
குடியிருப்புகளை உருவாக்குவது மற்றும் டேசா அங்கிரிக் பின்புறம்
செரண்டா செல்வதற்கு ஏதுவாக சுரங்கப் பாதை அமைப்பது போன்றவை
அந்நிறுவனம் மேற்கொண்டு வரும் மேம்பாட்டுப் பணிகளாகும் என அது
தெரிவித்தது.

இப்பகுதியில் மேம்பாட்டுப் பணிகளை நிறுத்தும்படி இ.சி.ஆர்.எல். திட்ட
நிர்வாகத்திற்கு இம்மாதம் 8 மற்றும் 10ஆம் தேதிகளில் நோட்டீஸ்
வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அப்பகுதிக்கு எங்கள் அதிகாரிகள்
சென்ற போது பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருப்பது
கண்டறியப்பட்டது என நகராண்மைக் கழகம் குறிப்பிட்டது.

இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறாமலிருப்பதை உறுதி
செய்வதற்காக அந்த மேம்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் பிரதான வழியில்
தாங்கள் மஞ்சள் நாடாவைக் கொண்டு தடுப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும்
அதில் கூறப்பட்டுள்ளது.

அப்பகுதியில் லோரிகள் மற்றும் கனரக வாகங்களின் போக்குவரத்து
அதிகரித்த காரணத்தால் தங்கள் குடியிருப்பு பகுதியில் அமைதியும் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படுவதாக பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Pengarang :