SELANGOR

131 நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது – கிள்ளான் நகராண்மை கழகம்

ஷா ஆலம், மே 31: கிள்ளான் நகராண்மை கழகத்தால் (MPK) தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மே 20 முதல் மொத்தம் 131 நாய்களுக்கு காணும் இடத்திலே (இன்-சித்து)  திட்டத்தின் வழி உரிமம் வழங்கப்பட்டது.

அடுத்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நீடிக்கும் இத்திட்டத்தில் 55 நாய்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப் பட்டதோடு கூடுதலாக அதற்காக 91 புதிய விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன என யாங் டிபெர்துவா நோரெய்னி ரோஸ்லான் கூறினார்.

“நாய் உரிமம் மற்றும் நாய் வளர்ப்பிற்கான உரிமம் (MPK) 2007 இன் தேவைகளுக்கு இணங்க, நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் குடியிருப்பாளர்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

“இந்த திட்டத்தின் மூலம் செல்லப் பிராணிகளின் நலனைக் கவனித்துக் கொள்வதில் உரிமையாளரின் பொறுப்புணர்வு மனப்பான்மையை வளர்ப்பதோடு நாய்களை வளர்ப்பதில் இருந்து வரும் தொல்லைகளை மறைமுகமாக கட்டுப்படுத்த முடியும்” என்று நேற்று கிள்ளான் நகராண்மை கழகத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் அவர் கூறினார்.

நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி, ஒவ்வொரு இடத்திலும் ஒரு செல்லப்பிராணிக்கு RM10 கட்டணத்தில் உரிமையாளர்கள் செல்லப்பிராணி உரிமத்தைப் பெறலாம் அல்லது இணையத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றார்.

“நாய்களுக்கு உரிமம் பெறத் தவறினால், உரிமையாளர் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.


Pengarang :