NATIONAL

வர்த்தகக் கடனுதவித் திட்டத்திற்கு ஹிஜ்ரா அறவாரியம் வெ.5 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூன் 1- மாநிலத்திலுள்ள தொழில்முனைவோருக்கு உதவும்
நோக்கில் யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் மூலதனக் கடனுதவித்
திட்டத்திற்கு 5 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

தங்களின் உற்பத்திப் பொருள்களைப் பிரபலப்படுத்தவும் வர்த்தகத்தை
விரிவாக்கம் செய்யவும் விரும்பும் தொழில் முனைவோருக்கு உதவும்
நோக்கில் பல்வேறு திட்டங்களை ஹிஜ்ரா இந்த மூலதனக் கடனுதவித்
திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது என்று ஹிஜ்ராவின்
இடைக்கால தலைமைச் செயல்முறை அதிகாரி நோர்மைஸா யாஹ்யா
கூறினார்.

இதுவரை தகுதி உள்ள தொழில்முனைவோருக்கு 1 கோடியே 30 லட்சம்
வெள்ளி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ள வேளையில் மேலும்
அதிகமான தொழில்முனைவோருக்கு வழங்குவதற்குத் தேவையான நிதி
எங்களிடம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

தொழில் முனைவோரின் தேவைக்கேற்ப பல்வேறு திட்டங்களை ஹிஜ்ரா
அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதுள்ள திட்டங்களே போதுமானவை
என்பதால் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த நாங்கள் எண்ணம்
கொண்டிருக்கவில்லை என்று அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள ராஜா துன் ஊடா நூலகத்தில் “ஹிஜ்ரா டூர் சிலாங்கூர்“
எனும் திட்டத் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநிலத்திலுள்ள மகளிர் தொழில் முனைவோருக்காகப் பிரத்தியேகமாக
உருவாக்கப்பட்ட நாடி எனப்படும் நியாகா டாருள் ஏசான் திட்ட உதவிகள்
மீது தாங்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக நோர்மைஸா
சொன்னார்.

வர்த்தக கடனுதவியாக 1,000 வெள்ளி முதல் 100,000 வெள்ளி வரை பெற
உதவும் ஐ-பிஸ்னஸ் திட்டத்திற்கே தொழில் முனைவோர் மத்தியில் அதிக
வரவேற்பு இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :