NATIONAL

“இந்திய அரசியல் தலைமையின் முன்நகர்வு“ ஆய்வரங்கு ஜூன் 10ஆம் மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெறும்

ஷா ஆலம், ஜூன் 1- இந்நாட்டில் இந்திய சமூகம் எதிர்நோக்கும்
பிரச்சனைகள் மற்றும் அதன் தேவைகளை புதிய அணுகு முறையின்
வாயிலாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லும் நோக்கில்
“மலேசியா மடாணி- இந்திய அரசியல் தலைமையின் முன்நகர்வு“ எனும்
தலைப்பிலான ஆய்வரங்கு வரும் ஜூன் மாதம் 10ஆம் தேதி
நடைபெறவுள்ளது.

ஷா ஆலம், மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் பிற்பகல் 2.00 மணி
தொடங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டிற்கு
மலேசிய இந்திய அரசு சாரா அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மலேசிய
இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆய்வரங்கை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார். பினாங்கு துணை
முதல்வர் பேராசிரியர் பி. இராமசாமி இந்த நிகழ்வில் முக்கிய உரை
நிகழ்த்துவார்.

ஈப்போ பாராட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜசெக உதவித்
தலைவருமான எம்.குலசேகரன், சுங்கை பூலோ நாடாளுமன்ற
உறுப்பினரும் மித்ரா பணிக்குழு தலைவருமான டத்தோ ஆர். ரமணன்,
செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் மந்திரி புசாரின் சிறப்பு
அதிகாரியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், கிள்ளான் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்பான் தலைவருமான சார்ல்ஸ் சந்தியாகோ
ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றுவர்.

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இந்த ஆய்வரங்கை நிறைவு
செய்து உரையாற்றுவார்.

இந்த ஆய்வரங்கில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்
மற்றும் பொது மக்கள் உள்பட சுமார் 1,000 பேர் கலந்து கொள்வர் என
ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த ஆய்ரவரங்கில் கலந்து கொள்ளும் பேராளர்கள் முன்வைக்கும் சமூக
நலன் சார்ந்த கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் மகஜராக தயாரிக்கப்பட்டு
அரசின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்படும்.


Pengarang :