MEDIA STATEMENT

சமூக ஊடகத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு விளம்பரத்தை நம்பி 110,000 வெள்ளியை குடும்ப மாது இழந்தார்

குவாந்தான், ஜூன் 4- சமூக ஊடகம் வாயிலாக பகுதி நேரமாக வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறிய இணைய மோசடிக் கும்பலின் வார்த்தையை நம்பி குடும்ப மாது ஒருவர் 110,556 வெள்ளியை இழந்துள்ளார்.

கடந்த மே மாதம் 30ஆம் தேதி டெலிகிராம் செயலி வாயிலாக அனுப்பப்பட்ட இணைப்பு ஒன்றில் லைக் பட்டனை அழுத்தி யூடியூப் காணொளியை பகிரும்படி அந்த 36 வயது குடும்ப மாது கேட்டுக் கொள்ளப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ யாஹ்யா ஓத்மான் கூறினார்.

எட்டு பணிகளை மேற்கொள்ள 15 முதல் 20 விழுக்காடு வரை கமிஷன் தொகை வழங்கப்படும் என்றும் எனினும், அதற்கு முன்னதாக காணொளி இணைப்பைப் பெறுவதற்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அப்பெண்ணிடம் கூறப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

கவர்ச்சிகரமான கமிஷன் தொகை கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையில் கவரப்பட்ட அந்தப் பெண் தனது சேமிப்பில் இருந்த பணத்துடன் நண்பர்களிடமிருந்து கடன் வாங்கி அந்த மோசடிக் கும்பலிடம் ஒப்படைத்துள்ளார் என்று அறிக்கை ஒனறில் அவர் குறிப்பிட்டார்.

அந்த சந்தேகப் பேர்வழி வழங்கிய ஐந்து வங்கிக் கணக்குகளில் 21 முறை இணையம் வாயிலாக பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பின்னரே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அம்மாது குவாந்தான் மாவட்ட போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார் என டத்தோ யாஹ்யா தெரிவித்தார்.

இணையத்தில் வெளியாகும் வேலை வாய்ப்புகளை குறிப்பாக அதிக லாபம் மற்றும் எளிதான வேலை என்ற வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :