NATIONAL

கோலாலம்பூரில் அனைத்து வீடமைப்புத் திட்டங்களிலும் பிபிஆர்., கட்டுப்படி விலை வீடுகள்- அரசு நிபந்தனை

கோலாலம்பூர், ஜூன் 6- கோலாலம்பூரில் அங்கீகரிக்கப்படும் அனைத்து
வீடமைப்புத் திட்டங்களிலும் கட்டுபடி விலை வீடுகள் மற்றும் பி.பி.ஆர்.
எனப்படும் மக்கள் வீடமைப்புத் திட்ட வீடுகள் நிர்மாணிக்கப்படுவதை
அரசாங்கம் நிபந்தனையாக்கவுள்ளது.

அதிகமான கட்டுப்படி விலையிலான வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கு
இன்னும் அடையப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கூறினார்.

ஆகவே, குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின் வீட்டுமைத் தேவையை
நிறைவு செய்வதற்கு ஏதுவாக அதிகமான கட்டுபடி விலை வீடுகள்
உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நிபந்தனை
விதிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் வீட்டுடைமைப் பிரச்சனை
கடுமையானதாக உள்ளது. கட்டுப்பாடி விலை வீடுகள் அல்லது பி.பி.ஆர்.
வீடுகளுக்கு ஆண்டு தோறும் 3,000 விண்ணப்பங்கள் வரை கிடைத்து வரும்
நிலையில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஆண்டுக்கு 300 வீடுகளை
மட்டுமே நிர்மாணிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று அவர்
குறிப்பிட்டார்.

தங்கள் வீடமைப்புத் திட்டத்தில் கட்டுபடி விலை வீடுகள் அல்லது
பி.பி.ஆர். வீடுகளைக் கட்டத் தவறும் மேம்பாட்டாளர்களுக்குக்
கோலாலம்பூரில் எந்த மேம்பாட்டுத் திட்டத்தையும் மேற்கொள்ள
அனுமதிப்பதில்லை என இரு மாதங்களுக்கு முன்னர் எனது தலைமையில்
நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

பி.பி.ஆர். வீடுகளுக்கான விண்ணப்பங்களுக்குக் கோலாலம்பூர் மாநகர்
மன்றம் விதிக்கும் நிபந்தனைகள் மிகவும் கடுமையாக உள்ளதாக
எழுந்துள்ள புகார் குறித்து விளக்கமளித்த அவர், அந்த நிபந்தனைகளில் சிறிதளவு தளர்வை வழங்கும்படி தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர்
தெரிவித்தார். மக்களவையில் இன்று பிரதமரிடம் கேள்வி-பதில் அங்கத்தில் பேசிய
போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Pengarang :