SELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனையின் வழி 40 லட்சம் பேர் பயனடைந்தனர்

ஷா ஆலம், ஜூன் 7- மாநில அரசின் அத்தியாவசியப் பொருள் மலிவு
விற்பனையின் வழி மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 40 லட்சம் பேர் குறிப்பாக
வசதி குறைந்தவர்கள் பயனடைந்துள்ளதாக விவசாய அடிப்படைத்
தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

தற்போது ஜூவாலான் ஏசான் ரஹ்மா என அழைக்கப்படும் இந்த ஜெலாஜா
ஏசான் ராக்யாட் விற்பனைத் திட்டத்தின் மூலம் சந்தையை விட 30
விழுக்காடு குறைவான விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய
வாய்ப்பினை பொது மக்கள் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

கடந்தாண்டு முதல் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவான
அளவில் சமையல் பொருள்களை மலிவாக விற்பனை செய்யும் இந்த
திட்டத்தை அமல் செய்த ஒரு மாநிலமாகச் சிலாங்கூர் விளங்குகிறது
என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்காக மாநில அரசு ஏறக்குறைய ஒரு
கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 40
லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில்
தெரிவித்தார்.

கடநதாண்டு தொடங்கப்பட்ட இந்த மலிவு விற்பனைத் திட்டம் இவ்வாண்டு
செப்டம்பர் முதல் தேதி வரை அமலில் இருக்கும். இம்முறை உள்நாட்டு
வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த
திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி மாநில மக்கள் 1 கோடியே 80
லட்சம் வெள்ளி வரை சிக்கனப்படுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளதாக
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மே 31ஆம் தேதி
கூறியிருந்தார்.


Pengarang :