NATIONAL

சுங்கை லங்காட் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு உறுதி- பொதுமக்கள் மகிழ்ச்சி

காஜாங், ஜூன் 12- சுங்கை லங்காட் ஆற்றோரம் ஏற்படும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவது குறித்து இங்குள்ள ஜாலான் ரெக்கோ வட்டார மக்கள் மன நிம்மதி அடைந்துள்ளனர்.

சுங்கை லங்காட் வெள்ளத் தடுப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள குறுகிய கால மற்றும் நீண்டகால முன்னெடுப்புகள் (ஆர்.டி.பி.) குறித்து சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் அளித்த விளக்கம் தங்களுக்கு மன நிறைவைத் தந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆட்சிக்குழு உறுப்பினரின் இந்த அறிவிப்பு கடந்த இருபது ஆண்டுகளாக வெள்ளப் பிரச்சனையை எதிர்நோக்கி வந்த தங்களுக்குப் புதிய விடியலை ஏற்படுத்தியுள்ளதாகத் தாமான் மக்கோத்தா வைச் சேர்ந்த பி. சுப்பிரமணியம் (வயது 75) கூறினார்.

வெள்ளத்தை தடுப்பது தொடர்பாக குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களை இந்த ஆர்.டி.பி. கொண்டுள்ளதால் ஆட்சிக்குழு உறுப்பினரின் விளக்கம் எங்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

வாக்குறுதி அளித்தபடி இந்த திட்டத்தை மாநில அரசு விரைந்து நிறைவேற்றும் என தாங்கள் பெரிதும் எதிர் பார்ப்பதாக அவர் சொன்னார்.

ஜாலான் ரெக்கோ, தாமான் மங்காத்தாவில் உள்ள ஆலய வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஜாலான் ரெக்கோ குடியிருப்பாளர்களுடனான சந்திப்பு நிகழ்வின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாநில அரசு கூறுவது போல் சுங்கை லங்காட் ஆற்றை ஆழப்படுத்துவது மூலம் இங்கு நிலவும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று தாமான் ஸ்ரீ லங்காட் குடியிருப்பாளர் லீ கிம் பெங் (வயது 65) கூறினார்.


Pengarang :