SELANGOR

கின்றாரா தொகுதியின் இலவச உணவு விநியோகத் திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படும்

ஷா ஆலம், ஜூன் 12- கோவிட்-19 பெருந்தொற்று பரவிய போது
பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்ட இலவச உணவு வழங்கும் திட்டத்தை கின்றாரா தொகுதி
தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமையும் மதிய உணவை இலவசமாக
வழங்கும் “டாப்போர் கின்றாரா“ எனும் இந்த திட்டத்தின் வாயிலாகப் பல
இன, சமயங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் வாரந்தோறும் பயன்
பெற்று வருகின்றனர் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ
ஹான் கூறினார்.

இந்த “டாப்போர் கின்ராரா“ திட்டம் அனைவருக்குமானது. பெருந்தொற்று
முடிவுக்கு வந்து விட்ட போதிலும் இந்த திட்டத்தை நாங்கள் தொடர்ந்து
அமல்படுத்துவோம். வசதி குறைந்தவர்களின் வயிறு எப்போதும்
நிறைந்திருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இந்த திட்டத்தை
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்
என்றார் அவர்.

“இவ்வுலகில் இலவச உணவு எங்கும் கிடைக்காது“ என்று ஒரு பழமொழி
உள்ளது. ஆனால், பூச்சோங், எம்.பி.எஸ்.ஜே. சமூக மண்டபத்தில்
ஞாயிறுதோறும் இலவச உணவு கிடைக்கும் என மாநில ஆட்சிக்குழு
உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

இந்த டாப்போர் கின்ராரா திட்டத்தில் மீகூன், மீ போன்ற சைவ உணவுகள்
விநியோகம் செய்யப்படுவதாகக் கூறிய அவர், பல்கலைக்கழக மாணவர்கள்
மற்றும் எம்.பி.எஸ்.ஜே. பணியாளர்கள் சமையல் பணியில் உதவுகின்றனர்
என்றார்.

உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்யும் பணியை நாங்கள்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மேற்கொண்டு வருகிறோம்.

இந்த இத்திட்டத்திற்கு தேவையான உணவுப் பொருள்களையும்
தொண்டூழியர்களின் உதவியையும் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம்
என அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :