SELANGOR

மேலாண்மை அமைப்பை விரைந்து அமைப்பீர்- அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு எம்.பி.ஏ.ஜே அறிவுறுத்து

ஷா ஆலம், ஜூன் 12- கூட்டு மேலாண்மை அமைப்பு (ஜே.எம்.பி.) மற்றும்
மேலாண்மைக் கழகத்தை (எம்.சி.) இன்னும் அமைக்காத அடுக்குமாடி
குடியிருப்புகள் விரைந்து அத்தகைய அமைப்புகளை உருவாக்குமாறு
பணிக்கப்பட்டுள்ளன.

அடுக்குமாடி குடியிருப்புகளை முறையாகப் பராமரிக்கவும் உகந்த சூழலில்
வசிப்பதற்குரிய சூழ்நிலையை உருவாக்கவும் இந்த கூட்டு மேலாண்மை
அமைப்பு மற்றும் மேலாண்மைக் கழகம் துணை புரியும் என்று அம்பாங்
ஜெயா நகராண்மைக் கழகத் தலைவர் டாக்டர் அனி அகமது கூறினார்.

அம்பாங் ஜெயா வட்டாரத்தில் 108,566 வீடுகளை உள்ளடக்கிய 637
அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளதை இவ்வாண்டு ஜனவரி மாதம்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுவதாக அவர் சொன்னார்.

எனினும், இதுவரை 227 ஜே.எம்.சி. மற்றும் 189 எம்.சி.கள் மட்டுமே
உருவாக்கப்பட்டு தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன என்று அவர்
தெரிவித்தார்.

இங்குள்ள மெனாரா எம்.பி.ஏ.ஜே.வில் நேற்று நடைபெற்ற அம்பாங் ஜெயா
நகராண்மைக் கழகத்தின் சுற்றுச்சூழல் சிறப்பு கொண்டாட்ட நிகழ்வில்
உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புகார்கள், சிக்கல்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்குவதைத்
தவிர்ப்பதற்கு ஏதுவாக 2013ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு
மேலாண்மைச் சட்டத்தின் 757வது பிரிவுக்கு ஏற்ப கூட்டு மேலாண்மை
அமைப்பு அல்லது மேலாண்மை கழகத்தை அமைக்கும்படி அடுக்குமாடி
குடியிருப்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :