NATIONAL

சிலாங்கூர் தேர்தல்- ஹராப்பான்- பாரிசான் தொகுதி பங்கீடு 95 விழுக்காடு பூர்த்தி- மந்திரி புசார் தகவல்

கோம்பாக், ஜூன் 12- சிலாங்கூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு
பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல்
கூட்டணிகளுக்கிடையே நடத்தப்பட்டு வரும் தொகுதி பங்கீடு ஏறக்குறைய
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளில் 53 தொகுதிகளுக்கு அதாவது 95
விழுக்காட்டு இடங்களுக்கான பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்டதாகச்
சிலாங்கூர் மாநிலப் பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.

அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலை
எதிர்கொள்ள மாநிலம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. தொகுதி பங்கீடு
தொடர்பில் இரு மாதங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பெரும்
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

நேற்று இங்குள்ள அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில்
நடைபெற்ற மாநில நிலையிலான தேசிய இளைஞர் தினத்தை தொடக்கி
வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எனினும், தமக்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் இந்த தொகுதி பங்கீடு
தொடர்பான மேல் விபரங்களை இவ்வாரப் பிற்பகுதியில் தாம்
வழங்கவுள்ளதாக அவர் சொன்னார்.

எஞ்சியுள்ள மூன்று தொகுதிகளையும் பக்கத்தானும் பாரிசானும் கோரி
வருவதால் அத்தொகுதிகளின் ஒதுக்கீடு தொடர்பில் இன்னும்
முடிவெடுக்கப்படவில்லை என்று மாநில மந்திரி புசாருமான அவர்
குறிப்பிட்டார்.

இந்த பிரச்சனையை விவாத மேசைக்குக் கொண்டு வருவதற்கு முன்னர்
தங்களுக்குள் தீர்வு காணும் முயற்சியில் பக்கத்தானும் பாரிசானும்
ஈடுபட்டு வருகின்றன என்றார் அவர்.


Pengarang :