NATIONAL

சிலாங்கூரிலுள்ள 77 தேவாலயங்களுக்குச் சிலாங்கூர் அரசு வெ.752,000 மானியம்

ஷா ஆலம், ஜூன் 12- அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காகச்
சிலாங்கூரிலுள்ள 77 தேவாலயங்களுக்கு மாநில அரசு 752,000 வெள்ளியை
மானியமாக வழங்கியுள்ளது.

ஒவ்வொரு வழிபாட்டுத் தலத்தின் தேவை மற்றும் கோரிக்கையின்
அடிப்படையில் இந்த மானியம் வழங்கப்பட்டதாக லீமாஸ் எனப்படும்
இஸ்லாம் அல்லாத சமய விவகாரங்களுக்கான குழுவின் இணைத்
தலைவர் ஹீ லோய் சியான் கூறினார்.

இந்த மானியத்திற்கு 2,000 விண்ணப்பங்கள் வரை பெறப்பட்டன.
ஒவ்வோரு தேவலாயத்தின் தேவையைப் பொறுத்து 5,000 வெள்ளி முதல்
50,000 வெள்ளி வரை வழங்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
இது வரை 44 தேவாலயங்களுக்கு 462,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ள
வேளையில் எஞ்சிய 33 தேவாலயங்களுக்கு 290,000 வெள்ளி இம்மாத
இறுதியில் வழங்கப்படும் என அவர் சொன்னார்.

இங்குள்ள சிலாங்கூர் மாநில அரசு தலைமையகத்தின் அனெக்ஸ்
கட்டிடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் சம்பந்தப்பட்ட வழிபாட்டுத்
தலங்களின் பொறுப்பாளர்களிடம் இந்த மானியத்தை ஹீ வழங்கினார்.

வழிபாட்டுத் தலங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை, நில உரிமை
பிரச்சனை மற்றும் நில கோரிக்கை தொடர்பான விவாகரங்களைத் தீர்க்கும்
பணியை லீமாஸ் அமைப்பு கடந்த 2008ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு
வருகிறது எனவும் அவர் கூறினார்.

முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களில் அடிப்படை வசதிகளை
மேம்படுத்துவது, சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட
நடவடிக்கைளை மேற்கொள்வதற்காக மாநில அரசு இவ்வாண்டு 80 லட்சம்
வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனிடையே, பெட்டாலிங் ஜெயாவிலுள்ள தங்களின் தேவலாயத்தில்
சமையலறையைத் தரம் உயர்த்துவதற்கு நிதியுதவி வழங்கிய மாநில
அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகப் பெனியல் சர்ச் பாதிரியார்
ஜோனதன் ரெணு கூறினார்.

இம்முறை 5,000 வெள்ளி மானியத்தைத் தாங்கள் பெற்றுள்ளதாகக் கூறிய
அவர், மாநில அரசிடமிருந்து தாங்கள் மானியம் பெறுவது இது
மூன்றாவது முறையாகும் என்றார்.


Pengarang :