SELANGOR

சிலாங்கூரில் சிறப்பான அடைவு நிலை பதிவு- ஒற்றுமை அரசைத் தற்காக்க அரசு ஊழியர்களுக்குப் பிரதமர் வேண்டுகோள்

ஷா ஆலம், ஜூன் 13- சிலாங்கூர் மாநிலத்தின் சிறப்பான அடைவு நிலை
மற்றும் மேம்பாடு அம்மாநிலத்தை ஒற்றுமை அரசாங்கத்தின் வலுவாகக்
கோட்டையாக உருவாக்கியுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கூறினார்.

மாநிலத்தின் மற்றும் நாட்டின் உந்து சக்தியாக விளங்கும் சிலாங்கூர்
அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் கடைப்பிடிக்கும் சிறப்பான மற்றும்
விவேகமான நிர்வாக முறையின் வாயிலாக அந்த மேன்மையை
தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் அரசு ஊழியர்களாகிய உங்களிடம் உண்மையாகவே வேண்டிக்
கேட்டுக் கொள்கிறேன். காரணம் சிலாங்கூர்தான் ஒற்றுமை அரசாங்கத்தின்
வலுவான கோட்டை என அவர் தமது உரையில் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தைத் தற்காக்க வேண்டியதன் அவசியத்தை நீங்கள்
உணர்வீர்கள் என நம்புகிறேன். இது உணர்வுப்பூர்வமான அல்லது
ஊதியத்திற்கு உத்தரவாதம் தரக்கூடிய விஷயம் அல்ல. சரவாக்
மாநிலத்திற்கு அடுத்த அதிக வளர்ச்சியைப் பதிவு செய்த மாநிலமாகச்
சிலாங்கூர் விளங்குவதே இதற்கு காரணம் என்றார் அவர்.

நடப்பு அரசாங்கத்தை தற்காப்பது மட்டும் முக்கியமல்ல. மாறாக,
நாட்டைக் காப்பதற்கான கடப்பாடும் இதில் அடங்கியுள்ளது என்று அவர்
மேலும் குறிப்பிட்டார்.

நேற்று, இங்குள்ள ஜூப்ளி பேராக் அரங்கில் மாநிலத்தைச் சேர்ந்த சுமார்
1,000 அரசு ஊழியர்கள் மத்தியில் முக்கிய உரையாற்றிய போது பிரதமர்
இவ்வாறு சொன்னார். மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் இந்த
நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த பிராந்தியத்தில் மகத்தான நாடு எனும் பெருமையை மலேசியா
மீண்டும் பெற சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கும் அரசு ஊழியர்கள் மிகவும் துணிச்சலுடன் தங்களின் பணிகளை ஆற்ற வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :