NATIONAL

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தைத் தரம் உயர்த்தும் பணி 2026இல் தொடங்கும்

கோலாலம்பூர், ஜூன் 13- கோலாலம்பூர் அனைத்துலக விமான
நிலையத்தை (கே.எல்.ஐ.ஏ.) தரம் உயர்த்தும் பணிகள் வரும் 2026ஆம்
ஆண்டு தொடங்கும்.

அவ்விமான நிலைய முனையத்தின் பயன்பாடு 90 விழுக்காட்டை
அடைந்தவுடன் விமான நிலையத்தைத் தரம் உயர்த்தும் பணிகள்
மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து அமைச்சு கூறியது.

எதிர்வரும் 2050ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டு காலத்திற்குக் கே.எல்.ஐ.ஏ.
விமான நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பான திட்டத்தை வரைய
மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் கடந்த 2019ஆம் ஆண்டில் ஆலோசக
நிறுவனம் ஒன்றை நியமித்ததாக அமைச்சு தெரிவித்தது.

இந்த பெருந்திட்ட ஆய்வு இரு கட்ட மேம்பாட்டுத் தேவைகளை
உள்ளக்கியிருந்தது. ஆண்டுக்கு 14 கோடி பயணிகள் வரை அதிகரிப்பது
மற்றும் சரக்குகளின் தேவையை ஆண்டுக்கு 25 லட்சம் டன்களாக
உயர்த்துவது ஆகியவையே அவ்விரு மேம்பாட்டுத் தேவைகளாகும்.

கே.எல்.ஐ.ஏ. முதலாவது முனையம் 3 கோடி பயணிகளைக் கையாளும்
வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கே.எல்.ஐ.ஏ.2
முனையம் 4 கோடியே 50 லட்சம் பயணிகளைக் கையாளும் திறனைக்
கொண்டுள்ளது.

கே.எல்.ஐ.ஏ. 1 தனது பயணிகள் இலக்கை எதிர்வரும் 2030ஆம் ஆண்டிலும்
கே.எல்.ஐ.ஏ. 2 தனது இலக்கை 2030ஆம் ஆண்டிற்கு அப்பாலும் அடையும்
என கணிக்கப்படுகிறது என மக்களவையில் வழங்கிய எழுத்துப்பூர்வப்
பதிலில் அமைச்சு தெரிவித்தது.

கடந்த 2019ஆம் ஆண்டில் கே.எல்.ஐ.ஏ. 1 2 கோடியே 92 லட்சம்
பயணிகளைக் கையாண்ட வேளையில் கேல்.எல்.ஐ.ஏ. 2 முனையம் 3
கோடியே 30 லட்சம் பயணிகளைக் கையாண்டது.


Pengarang :