NATIONAL

மலாய் ரிசர்வ் நிலம் தொடர்பில் அவதூறு பரப்பும் பாஸ் கட்சி- மந்திரி புசார் சாடல்

ஷா ஆலம், ஜூன் 15- சிலாங்கூரில் மலாய் ரிசர்வ் நிலம் தொடர்பான
தீர்மானம் மீது விவாதம் நடத்துவதில் மாநில அரசு தோல்வி கண்டு
விட்டது என்ற சிலாங்கூர் பாஸ் கட்சியின் அவதூறான குற்றச்சாட்டை
மந்திரி புசார் மறுத்துள்ளார்.

இதன் தொடர்பான மாநில சட்டமன்றத்தின் விவாத அறிக்கையைப்
பகிர்ந்து கொண்ட டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அந்த தீர்மானம் கடந்த
மார்ச் மாதம் 17ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சில
சட்டமன்ற உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டது என்றார்.

சிலாங்கூர் மாநில பாஸ் கட்சி அவதூறு பரப்புவதையும்
பொய்யுரைப்பதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். சிலாங்கூர் மலாய்
ரிசர்வ் நிலம் தொடர்பான தீர்மானம் இவ்வாண்டு மார்ச் மாதம் 17ஆம்
தேதி தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. இதுதான் அதன்
தொடர்பான சட்டமன்றத்தின் ஹான்ஸர்ட் (விவாத அறிக்கை) என அவர்
கூறினார்.

இந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தாதவர்கள் பாஸ் கட்சி
உறுப்பினர்கள் மட்டுமே. விஷயத்தை திசை திருப்பி மக்களை குழப்ப
வேண்டாம் என அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 80 விழுக்காட்டு மலாய் ரிசர்வ் நில மீட்பு நடவடிக்கைகள்
கே.எல்.ஐ.ஏ. எனப்படும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்
மற்றும் நெடுஞ்சாலைகளை உட்படுத்தியிருந்ததாக அந்த சட்டமன்ற
விவாத அறிக்கையில் அமிருடின் குறிப்பிட்டுள்ளார்.

மாற்று மலாய் ரிசர்வ் நிலத்தை வழங்கும் கொள்கையில் சில
மாற்றங்களைக் கடந்த 2020க்கு முந்தைய ஆண்டுகளில் மாநில அரசு
மேற்கொண்டதாகவும் மாற்று நிலம் வழங்கப்படும் போது நிலத்தின் அளவு மட்டுமின்றி அதன் மதிப்பையும் கவனத்தில் கொள்வதை இந்த கொள்கை மாற்றம் நோக்கமாக கொண்டிருந்ததாகவும் அவர் சொன்னார்.


Pengarang :