NATIONAL

பிள்ளைகளைக் கடத்தி விட்டதாகப் பொய் கூறி பிணைப்பணம் கோரும் கும்பல்- போலீசில் நான்கு புகார்கள் பதிவு

கோலாலம்பூர், ஜூன் 22- பள்ளிக்குச் சென்ற பிள்ளைகளைக் கடத்தி
விட்டதாகப் பொய் கூறி பெற்றோரிடம் பணம் பறிக்க மேற்கொள்ளப்பட்ட
முயற்சி தொடர்பில் போலீசார் நான்கு புகார்களைப் பெற்றுள்ளனர்.

இம்மாதம் 13 முதல் 15ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கிள்ளான்
பள்ளத்தாக்குப் பகுதியில் இப்புகார்கள் பெறப்பட்டதாகப் பிரிக்பீல்ட்ஸ்
மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி அமிஹிஷாம் அப்துல் சுக்கோர்
கூறினார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்கியல் நிர்வாக அதிகாரியாகப் பணி
புரியும் பெண்மணி ஒருவரைப் புலனம் மூலம் தொடர்பு
கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் “உங்கள் பிள்ளையைக் கடத்தி
விட்டோம். கணிசமான தொகையை கொடுத்தால் மட்டும் விடுவிப்போம்“
என மிரட்டியதாக அவர் தெரிவித்தார்.

அந்தப் பெண் உடனே தன் பிள்ளை பயிலும் பள்ளியைத் தொடர்பு
கொண்டுள்ளார். பிள்ளை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொண்ட
அவர் உடனடியாக அந்த நபருடனான தொடர்பை துண்டித்துள்ளார்
என அமிஹிஷாம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இந்த புகார் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420/511 பிரிவுகளின் கீழ்
விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இச்சம்பவம்
தொடர்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என பொதுமக்களைக்
கேட்டுக் கொண்டார்.

இந்த போன்ற எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள
காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும்
உங்களின் தனிப்பட்ட தகவல்களை அல்லது வங்கிக் கணக்குத் தொடர்பான
தரவுகளை அறிமுகம் இல்லாத நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என
அவர் கூறினார்.


Pengarang :