SELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனையின் வழி 40 லட்சம் பேர் பயன்

உலு கிளாங், ஜூன் 22- சிலாங்கூர்
மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு
விற்பனைத் திட்டம் கடந்த ஆண்டு
செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது
முதல் இதுவரை மாநிலத்தில் உள்ள சுமார்
40 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

இந்த மலிவு விற்பனைக்குச் சிலாங்கூர்
மாநில அரசு வழங்கும் உதவித்
தொகையின் மூலம் மாநில மக்கள் 2
கோடி 30 லட்சம் வெள்ளியை சேமிப்பதற்குரிய வாய்ப்பு
கிட்டியுள்ளதாகப் பி.கே.பி.
எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில
விவசாய மேம்பாட்டு கழகத்தின்
தலைமைச் செயல்முறை அதிகாரி டாக்டர்
முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

இது தவிர, இந்த திட்டத்தின் மூலம்
கடந்தாண்டு செப்டம்பர் தொடங்கி
இதுவரை 4 கோடியே 50 லட்சம் வெள்ளி
மதிப்புள்ள விற்பனையை பி.கே.பி.எஸ்.
பதிவு செய்துள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார்.

இங்குள்ள தாமான் கிராமாட், சூராவ்
அல்- தக்வாவில் நேற்று நடைபெற்ற
உலுகிளாங் தொகுதி நிலையிலான
ஏசான் ரஹ்மா விற்பனை திட்டத்தைப் பார்வையிட்ட
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.

இந்த மலிவு விற்பனை திட்டம்
இவ்வாண்டு இறுதி வரை நீடிக்கப்படும்
பட்சத்தில் மாநிலத்தில் உள்ள சுமார் 60
லட்சம் பேர் இதன் மூலம் பயன்
பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று
அவர் குறிப்பிட்டார்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி
10.00 வெள்ளிக்கும், பி கிரேட் முட்டை
ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும், இறைச்சி
ஒரு பாக்கெட் பத்து வெள்ளிக்கும்,
கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00
வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், ஐந்து
கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டிலான இந்த
ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை திட்டம்
உள்நாட்டு வாணிக அமைச்சின்
ஒத்துழைப்புடன் கடந்த ஜூன் ஒன்றாம்
தேதி தொடங்கி ஏசான் ரஹ்மா எனும்
பெயரில் மேற்கொள்ளப்படுகிறது.


Pengarang :