SELANGOR

சுபாங் ஜெயாவில் வெ.350,000 செலவில் வெள்ள நீர் சேகரிப்பு குளம் நிர்மாணிப்பு

சுபாங் ஜெயா ஜூன் 22 – இங்குள்ள யு.எஸ்.ஜே.1 தொழில் பேட்டை பகுதியில் ஏற்படும்
வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக ஜாலான் யு.எஸ்.ஜே.1/2 பகுதியில்
வெள்ள நீர் சேகரிப்பு குளம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மொத்தம் மூன்று லட்சத்து 34 ஆயிரத்து 631 வெள்ளி மதிப்பிலான இந்த வெள்ள நீர்
சேகரிப்பு குளத் திட்டம் இம்மாதம் 23ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி
முற்றுப்பெறும் என்று சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் இங் மேய் ஸீ கூறினார்.

இந்த வெள்ள நீர் சேகரிப்பு குளத் திட்டம் ப்ராஜெக்ட் பென்யாயாங் சிலாங்கூர்
(பி.எஸ்.பி.) முன்னெடுப்பின் கீழ் சட்டமன்றத் தொகுதிகளுக்கு
வழங்கப்பட்ட மானியத்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதாக இன்று நடைபெற்ற
அந்தத் திட்டத்தின் தொடக்க விழாவுக்குப் பின்னர் சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.

இந்த மழை நீர் சேகரிப்பு குளத்தில் 2,708 கன மீட்டர் அளவு நீரை சேகரிக்க முடியும். இதன்
மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தொழிற்பேட்டைகள் எதிர்
நோக்கி வரும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை
தெரிவித்தார்.

இப்பகுதியில் எதிர்நோக்கி வந்த வெள்ளப் பிரச்சனை தொடர்பாக நில அலுவலகம்
மற்றும் வடிகால் நீர் பாசனத் துறையுடன் சந்திப்பு நடத்தப்பட்டது. அங்கு நிலவும் வெள்ளப்
பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு தடுப்பணை கட்டுவது மற்றும் வெள்ள நீர் சேகரிப்பு
குளத்தை நிர்மாணிப்பது ஆகிய இரு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டன.  ஆயினும் கடுமையான மழையின் போது கிள்ளான் ஆற்று நீர் பெருக்கெடுப்பதை கருத்தில் கொண்டு மழைநீர் சேகரிப்பு குளத்தை நிர்மாணிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது என்றார் அவர்.


Pengarang :