ANTARABANGSA

கிளந்தானில் இ.சி.ஆர்.எல். திட்டம் ஆறு மாதங்களுக்கு முன்னதாக முற்றுப் பெறும்

பாசீர் பூத்தே, ஜூன் 22- வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முற்றுப்
பெறும் என எதிர்பார்க்கப்பட்ட கிளந்தான் மாநில கிழக்குக் கரை இரயில்
திட்டம் (இ.சி.ஆர்.எல்.) எதிர்பார்க்கப்பட்டதை விட ஆறு மாதங்கள்
முன்பாகவே முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 1,500 பணியாளர்களுடன் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் இது
வரை 61.97 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாக கிளந்தான் மாநில பொதுப்
பணித்துறை இயக்குநர் நிக் சோ யாக்கோப் கூறினார்.

பால நிர்மாணிப்பு, நில மீட்பு, பைலிங் ஆகிய பணிகள் திட்டமிட்டபடி
மேற்காள்ளப்பட்டு வரும் வேளையில் இம்மாநிலத்தின் முதலாவது
இ.சி.ஆர்.எல். நிலைய கட்டுமானமும் தொடங்கப்பட்டு விட்டது என்று
அவர் சொன்னார்.

சீனாவின் கம்யூனிகேஷன்ஸ் கான்ஸ்ட்ராக்சன் கம்பெனி லிமிடட்
நிறுவனம் மலேசியாவின் ரயில் லிங்க் நிறுவனம் ஆகியவை கூட்டாக
மேற்கொண்டு வரும் இந்தத் திட்டம் விரைவாக மேற்கொள்ளப்படுவதால்
நிர்ணயிக்கப்பட்டதை ஆறு மாதங்கள் முன்கூட்டியே திட்டத்தை
முழுமைபடுத்த முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த கட்டுமானப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதற்கு அவ்விரு
கட்டுமான நிறுவனங்களும் பணியில் காட்டி வரும் தீவிரம் மற்றும்
பயன்படுத்தப்படும் அதிநவீனத் தொழில்நுட்பம் ஆகியவை முக்கிய
காரணங்களாக விளங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள கம்போங் ஜெருசில் இ.சி.ஆர்.எல். திட்டப் பகுதிக்கு வருகை
மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.


Pengarang :