SELANGOR

ஐ-கிளின் செயலி மூலம் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் தீர்வு – KDEB கழிவு மேலாண்மை

ஷா ஆலம், ஜூன் 23: ஐ-கிளின் சிலாங்கூர் செயலியின் பயனர் ஒருவர் கேடிஇபி KDEB கழிவு மேலாண்மையின் (KDEBWM) விரைவான நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார்; காரணம் அளிக்கப்பட்ட புகார் குறுகிய காலத்தில் தீர்த்து வைக்கப்பட்டது.

அவர் குறிப்பிட்ட செயலி மூலம் புகாரளித்த 24 மணி நேரத்திற்குள் குப்பைகள் அகற்றப்பட்டதாக அக்மல் நஜாமுடின் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

“இந்த செயலியை இரண்டு முறை குப்பைகளை அகற்ற கோரி புகார் செய்வதற்காகப் பயன்படுத்தினேன். நேற்று காலை நான் புகார் செய்தேன், மதியம் எனக்கு அழைப்பு வந்தது. அதனை தொடர்ந்து, இன்று காலை குப்பை அகற்றப்பட்டது.

“மலேசியர்கள் தூய்மையில் அக்கறை செலுத்தினால் நாடு தூய்மையாக இருக்கும்,” என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டார்.

அந்த பதிவிற்கு டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் பதிலளித்தார்.  கேடிஇபி KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) உருவாக்கிய ஐ-கிளின் பயன்பாடு சிறந்த பொது சேவை விருதை வென்றது.

இதுவரை 100,000 பயனர்கள் அச்செயலியில் புகார்களை பதிவு செய்துள்ளனர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே பாதி வரை அதன் மூலம் 15,000 புகார்கள் பெறப்பட்டுள்ளன என அதன் நிர்வாக இயக்குனர் டத்தோ ராம்லி முகமட் தாஹிர் கூறினார்.

திடக்கழிவு சேகரிப்பு அல்லது வடிகால் சுத்தம் செய்யப் படாதது பற்றிய புகார்களைப் பொதுமக்கள் தெரிவிப்பதையும் இணையச் சேவைகளைப் பெறுவதையும் ஐ-கிளின் செயலி எளிதாக்குகிறது.

குப்பை அகற்றும் சேவைகளைக் கோருவதுடன், குடியிருப்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள துப்புரவு புகார்களை சமர்ப்பிப்பதை யும் இந்தச் செயலி எளிதாக்குகிறது.

பொதுமக்கள் இச்செயலியை கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது வாடிக்கையாளர் சேவையை 1-800-88-2824/019-375 9592 அல்லது புலனம் (019-2742824) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதனால் புகார்கள் விரைவாகவும் துல்லியமாகவும் கையாளப்படும்.


Pengarang :