33 மாதத்தில்  37,000 உயிர்களை பலி கொண்டவர்கள் ஆட்சி மாற்றத்தை பற்றி பேசலாமா?  சிலாங்கூர் காபந்து  அரசின் மந்திரி புசார்  அதிரடி தாக்கு.

செய்திகள் சு. சுப்பையா

ஷா ஆலம்.ஜூன்.25-  33 மாத  ஆட்சி காலத்தில் 37,000 பேர்களை கோவிட்-19 பெருந் தொற்றுக்கு பலி கொடுத்தவர்கள் தற்போது சிலாங்கூரில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரப் போகிறோம் என்பது அடுக்குமா? நியாயமா? என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கேள்வி எழுப்பினார்.

நேற்று சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஷா ஆலம் , டத்தாரான் மெர்டேக்காவில் நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் இயந்திரத்தை தொடக்கி வைத்து பேசிய சிலாங்கூர்  காபந்து அரசின் தலைவரான டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி,  சிலாங்கூரில் உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளை  கைப்பற்றி மீண்டும் நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய முன்னணியுடன் இணைந்து ஒற்றுமை அரசை நிறுவ கட்சி தொண்டர்களுக்கு  ஊக்கமளித்தார்.

அடுத்ததும் நம் ஆட்சியே, மக்களாட்சி  என்ற லட்சியத்தோடு சிவப்பு  மஞ்சள்  பேரணியை கோலாமாக ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நம்பிக்கை கூட்டணியின்    தொண்டர்களுடன்  தேர்தல் இயந்திரத்தை தொடக்கி வைத்த போது இவ்வாறு பெரிக்காத்தான் நேசினாலுக்கு  எதிரான தாக்குதலை அதிரடியாக தொடங்கினார்.

பி.கே.ஆர் கட்சி தலைமையில் நம்பிக்கை கூட்டணிக்கு மக்கள்  அளித்த ஆட்சி அதிகாரத்தை, கீழறுப்பு  செய்த நம்பிக்கைக்கு  துரோகி அஸ்மின். அவர் தலைமையில் மீண்டும் சிலாங்கூரில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரப் போகிறோம் என்று கூப்பாடு போட தொடங்கியிருக்கும் அஸ்மின் அலிக்கு எதிராக கடும் தாக்குதல்  தொடுத்தார்.

அஸ்மின் சிலாங்கூரை ஆட்சி செய்ததை விட சிறப்பாக தற்போது ஆட்சி செய்து வருகிறோம். மலேசியாவிலேயே முதன் முறையாக சிலாங்கூர்  மட்டுமே , முதல் ஐந்தாண்டு திட்டம் தீட்டி வெற்றிகரமாக  முன்னெடுத்துச் செல்கிறது. கடந்த, 2021 ஆம் ஆண்டில் மட்டும் சிலாங்கூர் மாநில அரசு மத்திய அரசுக்கு 24.8% வருவாய் ஈட்டி கொடுத்துள்ளது. அந்த அளவுக்கு சிலாங்கூர் மாநில அரசின் செயல்பாடுகள்  சிறப்பாக  இயங்கி வருகிறது.

இன வாத அரசியலுக்கு சிலாங்கூரில் இனி இடம் இல்லை என்பதை சிலாங்கூர் மாநில மக்கள் வருகின்ற மாநில தேர்தலில் உணர்த்துவார்கள் என்று கடுமையாக எச்சரித்தார்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் சிலாங்கூரில் அரசு செய்த நற்சேவையை வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவர் நம்பிக்கை கூட்டணியின்  தொண்டர்களை, கட்சியின் தேர்தல் இயந்திரத்தை கேட்டுக் கொண்டார்.

இந்த சிவப்பு மஞ்சள் தேர்தல் பேரணி தொடக்க விழாவில் 5 பிரச்சார  வாகனங்கள் வெள்ளோட்டம் விடப்பட்டது. மேலும் சிலாங்கூரில் உள்ள 56 சட்டமன்ற தொகுதியையும் மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கை குறிக்கும் வகையில் 56 மோட்டார் சைக்கிலும் வெள்ளோட்டம் விடப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப காலத்தில் நவீன  முறையில் பிரச்சாரம் மேற்கொள்ள மாநிலம் முழுவதும் அடுத்த இரண்டு மாத காலத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ள பிரச்சார லாரியும் வெள்ளோட்டம் விடப்பட்டது.

ஆக மொத்தத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது,  நேற்றைய சிவப்பு மஞ்சள் தேர்தல் இயந்திரம் பேரணி என்றால் அது மிகையாகாது.

நம்பிக்கை கூட்டணியின் தொண்டர்கள் இன, சமய வேற்றுமை இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாகவும் மிகவும் உற்சாகத்துடன் விடை பெற்று சென்றனர்.

சிலாங்கூர் மாநில அரசில் இடம் பெற்றுள்ள அமானா கட்சியின் தலைவர் டாக்டர் ஹிஷாம், ஜ.செ.க. வின் சிலாங்கூர் மாநில தலைவர் கோபிந் சிங் டியோ, அமானா கட்சியின் தேசியத் தலைவர் மாட் சாபு ஆகியோர் அனல் பறக்கும் உற்சாக பிரச்சார உரையாற்றினார்கள்.

இந்த சிவப்பு மஞ்சள் தேர்தல் இயந்திர தொடக்க விழாவில் சிலாங்கூரில் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பான்மையானவர்கள் வந்திருந்தனர். ஏறக்குறைய ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆக மொத்தத்தில் சிலாங்கூர் நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.


Pengarang :