SELANGOR

மதிப்பீட்டு வரியைச் செலுத்த தவறிய 9,016 பேருக்கு எதிராக சொத்து முடக்க ஆணை பிறப்பிப்பு

கேம்பாக், ஜூன் 28- இவ்வாண்டு ஏப்ரல் முதல் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை மதிப்பீட்டு வரி பாக்கியைச் செலுத்த தவறிய சொத்து உரிமையாளர்களுக்கு எதிராக செலாயாங் நகராண்மைக் கழகம் 28,244 சொத்து முடக்க ஆணைகளை தயார் செய்துள்ளது.

அவற்றில் 9,016 ஆணைகள் சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக செலாயாங் நகராண்மைக் கழகத் துணைத் தலைவர் அடி ஃபைசால் அகமது கூறினார்.

சொத்து உரிமையாளர்கள் 200 வெள்ளிக்கும் மேல் வரி பாக்கியை வைத்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சொத்து முடக்க ஆணை வெளியிடப்படும் என அவர் சொன்னார்.

தங்கள் மதிப்பீட்டு வரியை இன்னும் செலுத்தாமல் இருக்கும் சொத்து உரிமையாளர்களுக்கு சொத்து தடுப்பு ஆணைகளை அனுப்பும் பணியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள பழைய எம்.பி.எஸ். கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற செலாயாங் நகராண்மைக் கழகத்தின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சொத்து தடுப்பு ஆணை அனுப்பப்பட்ட ஏழு நாட்களுக்குள் வரி பாக்கியை முழுமையாகச் செலுத்தாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

தங்களின் சொத்துக்களுக்கு சீல் வைக்கப் படுவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக வரி பாக்கியை விரைந்து செலுத்துமாறு சொத்து உரிமையாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்தாண்டில், சொத்து தடுப்பு ஆணை அனுப்பப்பட்ட ஏழு நாட்களுக்குள் வரி பாக்கியை செலுத்தத் தவறிய 2,651 பேரின் சொத்துகளுக்குச் சீல் வைக்கப்பட்டன.


Pengarang :