SELANGOR

ரவாங், சுபாங் ஜெயா, பெ.ஜெயாவில் சாலைகளைச் செப்பனிடும் பணியில் இன்ஃப்ராசெல் தீவிரம்

ஷா ஆலம், ஜூன் 28- சிலாங்கூரில் சாலை பராமரிப்புப் பணிகளுக்குப்
பொறுப்பேற்றுள்ள இன்ஃப்ராசெல் சென்.பெர்ஹாட் நிறுவனம் மிகப்பெரிய
அளவிலான சாலை சீரமைப்புப் பணிகளை மாநிலம் முழுவதும்
மேற்கொண்டு வருகிறது.

அந்த பணியின் ஒரு பகுதியாக ரவாங், சுபாங் ஜெயா மற்றும் பெட்டாலிங்
ஜெயாவில் இம்மாதம் 20ஆம் தேதி தொடங்கி சாலைகளைச் செப்பனிடும்
பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சாலை சீரமைப்புத் திட்டத்தில் “மில் அண்ட் பேவ்“ எனப்படும்
சாலையின் பழுதடைந்த மேற்பகுதியை அகற்றி விட்டு புதிதாக தார்
சாலை அமைக்கும் அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதாக அந்நிறுவனம்
கூறியது.

இந்த முறையைப் பயன்படுத்தி ரவாங், பண்டார் தாசேக், ஜாலான் தாசேக்
புத்ரியில் சாலைகளைச் செப்பனிடும் பணி மேற்கொள்ளப்படுவதாக
அந்நிறுவனம் தெரிவித்தது.

சுபாங் ஜெயா, ஜாலான் பெர்சியாரான் பூச்சோங் பெர்மாய் மற்றும்
பெட்டாலிங் ஜெயா, ஜாலான் பிஜேஎஸ் 1/25 ஆகிய சாலைகளில்
இம்முறையின் கீழ் சாலைகள் சீரமைக்கப்படுகின்றன என்று அந்நிறுவனம்
தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

பொது மக்களின் வசதிக்காக மாநிலத்தில் சாலைகளைப் பழுதுபார்ப்பதற்காக
5 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் மாபெரும் சாலை சீரமைப்புத்
திட்டத்தை மாநில அரசு கடந்த மே மாதம் தொடங்கி மேற்கொண்டு
வருகிறது.

மாநிலத்திலுள்ள சாலைகளைப் பராமரிப்பதற்கு ஆண்டு தோறும் ஒதுக்கீடு
செய்யப்பட்டு வரும் 50 கோடி வெள்ளி தவிர்த்து கூடுதலாக இந்த ஐந்து
கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.


Pengarang :