SELANGOR

மாநிலத் தேர்தல்- தயார் நிலையில் ஹராப்பான் தேர்தல் இயந்திரம்- மக்களைச் சந்திக்கும் பணியில் தீவிரம்

ஷா ஆலம், ஜூன் 30- வரும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்காக சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் தேர்தல் இயந்திரம் ரமலான் மாதத்திற்கு முன்பிருந்தே தீவிர  நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

பாரிசான் நேஷனல் தேர்தல் இயந்திரத்துடன் இணைந்து அடிமட்ட நிலையில் மக்களை அணுகி ஆதரவுத் தேடும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக சிலாங்கூர் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இப்போது நமது நடவடிக்கைகள் தயார் படுத்துவது மற்றும் மக்களைச் சந்திப்பது ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக நமது தேர்தல் இயந்திரத்தை ஒன்றுபடுத்துவது நமது நடவடிக்கையாக அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

அடிமட்ட நிலையில் ஹராப்பான்- பாரிசான் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அவர்கள் தொடர்பில் உள்ளதாக நான் கருதுகிறேன். மத்திய நிலையைப் பொறுத்த வரை வெகு விரைவில் உறுதி செய்வோம் என்றார் அவர்.

இங்குள்ள தமது அதிகாரத்துவ இல்லத்தில்  இன்று நடைபெற்ற குர்பான் பெர்டானா பலியிடல் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூரில் பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான் நேஷனல் இடையிலான தொகுதி பங்கீடு இன்னும் ஒரு வார காலத்தில் முடிவுக்கு வரும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

மாநிலத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் சிலாங்கூர் சட்டமன்றம் கடந்த 23ஆம் தேதி அதிகாரப்பூர்மாக கலைக்கப்பட்டது.  


Pengarang :