ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

நண்டு  பிடிக்கும் போது நேர்ந்த துயரம்- மின்னல் தாக்கி இளைஞர் மரணம்

இஸ்கந்தார் புத்ரி, ஜூன் 30- இங்குள்ள பூலாவ் மேராம்போங் அருகே கடலில் தன் தந்தையுடன் நண்டு பிடித்துக் கொண்டிருந்த பதின்ம வயது ஆடவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். 

இன்று காலை 8.15 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த ஆடவரின் 60 வயது தந்தை காயமின்றி உயிர்த்தப்பியதாக இஸ்கந்தார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஹ்மாட் அரிபின் கூறினார்.

கடுமையாக மழை பெய்து கொண்டிருந்த அச்சமயத்தில் 15 குதிரை சக்தி கொண்ட படகில் தந்தையும் தனயனும் இருந்தனர். முதல் நாள் வீசிய வலையை இழுக்கும் பணியில் அவ்விருவரும் ஈடுபட்டிருந்த போது திடீரென மின்ன தாக்கியது என்று அவர் குறிப்பிட்டார்.

மின்னலின் பயங்கரத் தாக்கத்தால் தந்தை படகின் இயந்திரப் பகுதியில் போய் விழுந்தார். எனினும், மின்னல் தாக்குதலுக்கு ஆளான தன் மகன் கடலில் விழாமல் உடனடியாகப் பாய்ந்து பிடித்தார், அச்சமயம் அருகில் இருந்த மீனவர்களும் உதவிக்கு வந்தனர் என்றார் அவர்.

 கம்போங் லாடாங்கைச் சேர்ந்த அந்த இளைஞர் பள்ளி படிப்பை மேற்கொள்ளவில்லை என்றும் தன் தந்தைக்கு உதவியாக மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் சொன்னார்.


Pengarang :