SELANGOR

கோத்தா அங்கிரிக் தொகுதியைத் தற்காத்துக் கொள்ளத் தயார்- நஜ்வான் ஹலிம் கூறுகிறார்

ஷா ஆலம், ஜூலை 3- விரைவில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கோத்தா அங்கிரிக் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அத்தொகுதியின் நடப்பு உறுப்பினரான நஜ்வான் ஹலிம் நம்பிக்கைக் கொண்டுள்ளார்.

இத்தொகுதியில் இத்தனை ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அடிப்படையாக கொண்டு இந்த நம்பிக்கையை தாம் வெளிப்படுத்துவதாக நஜ்வான் சொன்னார்.

இந்த தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமைத்துவம் தமக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள தாம் தயாராக உள்ளதாக பி.கே.ஆர். கட்சி பிரநிதிநிதியான அவர் கூறினார்.

வரும் மாநிலத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக தனது பெயரை ஷா ஆலம் கெஅடிலான் கிளை முன்மொழிந்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள நான் முழு தயார் நிலையில் உள்ளேன். கோத்தா அங்கிரிக் தொகுதியை ஹராப்பான் தக்க வைத்துக்  கொள்ளும் என நான் நம்புகிறேன் என்றார் அவர்.

கடந்த ஐந்தாண்டுகளாக இந்த தொகுதியில் தாம் முன்னெடுத்த திட்டங்கள் தற்போது பலன் தரத் தொடங்கியுள்ளதாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியின் உறுப்பினராக இருந்து வரும் நஜ்வான்  குறிப்பிட்டார்.

சாதனைகளை ஒவ்வொன்றாகக் கூறினால் பட்டியல் நீண்டு கொண்டே போகும். சுருக்கமாகச் சொன்னால், ஷா ஆலமில் வீடமைப்பு, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நாங்கள் தீர்வு கண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

குடியிருப்பாளர் சங்கங்கள் இல்லாத குடியிருப்பு பகுதிகளில் அத்தகைய அமைப்புகளை உருவாக்குவதற்கு ஊக்குவிப்பதில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். இத்தகைய சங்கங்கள் இல்லாத காரணத்தால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்வது அல்லது உதவிகளை வழங்குவதில் சிரமத்தை எதிர்நோக்கி வந்தோம் என்றார் அவர்.


Pengarang :