SELANGOR

மாநில அரசின் இலவசக் குடிநீர்த் திட்டத்தின் வழி 301,549 பயனீட்டாளர்களுக்கு அனுகூலம்

கோலாலம்பூர், ஜூலை 5- மாதம் 20 கனமீட்டர் நீரை இலவசமாகப்
பெறுவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் திட்ட அமலாக்கம் மூலம் கடந்த
2020 டிசம்பர் மாதம் வரை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் 301,549
வாடிக்கையாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.

ஸ்கிம் ஆயர் டாருள் ஏசான் (எஸ்.ஏ.டி.இ.) எனும் இந்த இலவச குடிநீர்த்
திட்டத்திற்கு உண்டாகும் 3 கோடி வெள்ளி செலவுத் தொகையை மாநில
அரசே ஏற்றுக் கொள்வதாக ஆயர் சிலாங்கூர் சென்.பெர்ஹாட்
நிறுவனத்தின் இடைக்கால தலைமைச் செயல்முறை அதிகாரி இஞ்சினியர்
அபாஸ் அப்துல்லா கூறினார்.

ஆகக்கடைசி நிலவரப்படி 301,549 ஆயர் சிலாங்கூர் வாடிக்கையாளர்கள் 20
கன மீட்டர் நீரை இலவசமாகப் பெறுவதற்குரிய வாய்ப்பினைப்
பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானம் பெறும்
பி40 தரப்பினர் மற்றும் மலிவு விலை வீடுகளில் வசிப்பவர்கள் ஆவர்
என்றார் அவர்.

இந்த இலவசக் குடிநீர்த் திட்டத்திற்கான பதிவு தொடர்ந்து நடைபெற்று
வருகிறது. இதன் அமலாக்க நிறுவனம் என்ற முறையில் ஆயர் சிலாங்கூர்
நிறுவனம் இதற்கான விண்ணப்பங்களை பொது மக்களிடமிருந்து பெற்று
மேல் நடவடிக்கைக்காக மாநில அரசிடம் ஒப்படைக்கிறது என்று அவர்
மேலும் சொன்னார்.

இதனிடையே, பணிகளை எளிதாக மேற்கொள்வதற்கு ஏதுவாக இணையம்
வாயிலாக குடிநீர்க் கட்டண பில்களைப் பெறுவதற்குப் பதிவு செய்து
கொள்ளும்படியும் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
தற்போது, 26 லட்சம் ஆயர் சிலாங்கூர் வாடிக்கையாளர்களில் 65
விழுக்காட்டினர் அல்லது 17 லட்சம் பேர் இ-பில் முறைக்கு மாறியுள்ளனர்.

இதர வாடிக்கையாளர்களும் மரபு ரீதியான பில் முறைக்கு பதிலாக
இணைய முறைக்கு மாறும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.


Pengarang :