SELANGOR

அஸ்மின் நிர்வாகத்தில் மிகவும் குறைவான முதலீடு பதிவு- அமிருடின் அம்பலம்

செய்திகள் -சு. சுப்பையா

 

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 6 – பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி
மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றிய 15 ஆண்டுகளில், டத்தோஸ்ரீ முகமது
அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி புசாராக இருந்தபோதுதான் முதலீடுகள்
உண்மையில் மிகக் குறைவான அளவு இருந்தது. அஸ்மின் மந்திரி பெசாராக

இருந்தபோது சிலாங்கூரில் முதலீடுகள் ஆண்டுக்கு 700 கோடி வெள்ளிக்கும்
குறைவாக இருந்தது என்று தற்போதைய புசாரும் மற்றும் மாநில ஹராப்பான்
தலைவருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

கடந்த 2018ஆம் ஆண்டு அஸ்மின் மந்திரி புசாராக இருந்தபோது தேசிய மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மாநிலத்தின் அதிகபட்ச பங்களிப்பு 23.7
சதவீதமாக இருந்த வேளையில் தற்போதைய புள்ளி விபரத் துறையின்
தரவுகளின்படி கடந்த ஆண்டு 25.5 சதவீதம் பங்களிப்பை மாநில அரசு
வழங்கியது என்று ​​அமிருடின் தெரிவித்தார்.

அஸ்மின் பாதியில் கட்சியை விட்டு விலகி மத்தியில் பொருளாதார
அமைச்சராக ஆன பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜோகூரை விட
சிலாங்கூர் பின்தங்கிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

பின்னர் நான் மந்திரி புசாராக அன பிறகு மேற்கொண்ட ஆய்வின்போது
மாநிலத்தின் முதலீடு 600 கோடி வெள்ளி முதல் 700 கோடி வெள்ளி வரை மட்டுமே
இருந்தது தெரியவந்தது. பக்கத்தான் அரசாங்கத்தின் 15 ஆண்டு கால
ஆட்சியில் இதுவே மிக குறைவான முதலீடாகும் என்றார் அவர்.

2018 இல் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து மாநிலத்தின்
முதலீட்டு 1,800 கோடி வெள்ளியாக உயர்ந்தது என்று அமிருடின்
சுட்டிக்காட்டினார். மேலும் கடந்த ஆண்டில் முதலீடு 1,700
கோடி வெள்ளியாகப் பதிவானது என்றும் அவர் கூறினார்.

முதலீடு மீட்சி பெற்றதற்கு தாமே காரணம் என்று அஸ்மின் கூறினார். அந்த
நேரத்தில் அவர் பொருளாதார அமைச்சராக இருந்தார். ஆனால், அவர்
எதுவும் செய்யவில்லை. அரசாங்கத்தைக் கவிழ்த்து, டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் பிரதமராக்குவதைத் தடுப்பதுதான் அவரின் நோக்கமாக
இருந்தது என்றார் அவர்.

அஸ்மின் நிர்வாகத்தில் நமது கையிருப்பு 214 கோடி வெள்ளியாக குறைந்தது.
ஆனால் அது இப்போது 329 கோடி வெள்ளியாக உயர்வு கண்டது.  அடுத்த வாரம், அஸ்மின் எவ்வளவு செலவு செய்தார், நான் எவ்வளவு செலவு செய்தேன் என்பதைக்
காட்டுகிறேன்.

விவேகமான செலவினங்களின் மூலம் பொது நிதிகள் விருப்பமில்லாமல் செலவழிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய முடியும் என்பதை நான் நிரூபிப்பேன். எங்களிடம் வலுவான சேமிப்பு உள்ளது, மக்கள் நலனுக்காக நாங்கள் போதுமான அளவு
செலவிடுகிறோம் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :