SELANGOR

மேம்பாட்டு வழிகாட்டியின் வாயிலாகக் கிள்ளான் உள்ளிட்ட அரச நகர்கள் பாதுகாக்கப்படும்

புத்ராஜெயா, ஜூலை 9- நாட்டின் இறையாண்மையின் அடையாளமாக
விளங்கி வரும் அரச நகர்களைக் காக்கும் நோக்கில் அரச நகர திட்டமிடல்
மற்றும் மேம்பாட்டு வழிகாட்டி (ஜி.பி.பி.) இன்று இன்று வெளியிடப்பட்டது.
தீபகற்ப மலேசியாவில் உள்ள ஒன்பது அரச நகர்களுக்கு இந்த வழிகாட்டி
பொருந்தும் என்று ஊராட்சி மன்ற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஙா
கோர் மிங் கூறினார்.

பாரம்பரியம், அடையாளம், பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை
ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய இந்த வழிகாட்டி கடந்த மே மாதம்
17ஆம் தேதி அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு
அங்கீகரிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

பெர்லிஸ் மாநிலத்திலுள்ள ஆராவ் அரச நகர், கெடா மாநிலத்தின் அனாக்
புக்கிட் அரச நகர், பேராக் மாநிலத்தின் கோல கங்சார் அரச நகர்,
சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் அரச நகர், நெகரி செம்பிலான்
மாநிலத்தின் ஸ்ரீ மெராந்தி அரச நகர் ஆகியவற்றில் இந்த வழிகாட்டியின்
படி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

மேலும், ஜொகூர் மாநிலத்தின் பண்டார் மகாராணி பண்டார் மூவார் அரச
நகர், கிளந்தான் மாநிலத்தின் குபாங் கிரியான் அல்-முகமது அரச நகர்,
கோல திரங்கானு அரச நகர், பகாங் மாநிலத்தின் பெக்கான் அரச நகர்
ஆகியவையும் இதில் அடங்கும் என்றார் அவர்.

மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் சுல்தான்களின் பண்பாடு மற்றும்
மரபுகளைக் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த நகர்கள் எதிர்காலச்
சந்ததியினருக்காகத் தொடர்ந்து கட்டிக்காக்கப்பட வேண்டியது அவசியம்
என்றும் அவர் சொன்னார்.


Pengarang :