NATIONAL

ஒரு நிலையான குடும்பமே வெற்றிகரமான சமுதாயத்தை உருவாக்கும்

ஷா ஆலம், ஜூலை 7: ஒரு நிலையான குடும்பமே வெற்றிகரமான சமுதாயத்தின் முக்கிய அடித்தளமாகும். மேலும் அது ஒரு நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது என்று அரசியலமைப்பு நிபுணர் கூறினார்.

அனைத்து தலைவர்களும் குடும்பம் என்ற கட்டமைப்பு நன்கு உருவாக்கப்படுவதை உறுதிசெய்ய அழைப்பு விடுத்துள்ளார் டத்தோ டாக்டர் ஷாம்ரஹாயு அப்துல்லா அஜீஸ்.

“ஒரு நாடு என்பது குடும்பம் என்ற கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு தொடங்குகிறது. ஆகையால் தலைவர்கள் குடும்பம் என்ற கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

“குடும்பத்தில் நல்ல பழக்க வழக்கங்களைப் போதிக்க வேண்டும். மக்கள் ஒழுக்கமாக இருக்கும் போது, சட்டம் தானே செயல்படும்,” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மாநில மசூதியில் உள்ள இஸ்லாமிய விரிவுரை மற்றும் முசகரா மண்டபத்தில் நடந்த இஸ்லாமிய நம்பிக்கை வலுப்படுத்தும் மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்தார்.

இதற்கிடையில், மாநிலத்தில் ASWJ கொள்கைகளை அமல்படுத்த புதிய சட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று டாக்டர் ஷாம்ரஹாயு கூறினார்.

இஸ்லாமிய விழுமியங்களை நிலைநிறுத்துவதில் ஒரு மதத் தலைவராகச் சிலாங்கூர் சுல்தானின் ஆணை போதுமானது எனக் குறிப்பிட்டார்.


Pengarang :