NATIONAL

கல்வி வாய்ப்பினைப் பெறுவதில் எந்த இனமும் புறக்கணிக்கப் படாது-அமைச்சர் ஃபாட்லினா உறுதி

கூலிம், ஜூலை 10 – இந்நாட்டில் கல்வி வாய்ப்புகளை பெறுவதில் எந்த ஒரு இனமும் ஓரங்கட்டப் படாது என்பதோடு தற்போது உள்ள கல்வி  முறையை மேம்படுத்த முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று  கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது.

அரசாங்கம் மலாய் மற்றும் பூமிபுத்ரா கோட்டா முறையை பேணி வந்தாலும் கல்வியில் மற்ற இன மாணவர்களுக்கு  வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அதன் அமைச்சர் ஃபாட்லினா சிடேக் கூறினார்.

பிரதமர் (டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்) கூறியதை நாங்கள்  ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அதே நேரத்தில் கல்வி அமைச்சு மட்டத்தில் நாங்கள் பல முன்னேற்றங்களை செய்துள்ளோம். மேலும் நாங்கள் எந்த இனத்தையும் (கல்வியில்) ஓரங்கட்ட வில்லை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என்றார் அவர்.

இது முக்கியமானது. குறிப்பாக ஆறாவது படிவத்தில்  அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதை உறுதி  செய்வதற்கான சாத்தியங்களை கண்டறிந்து வருகிறோம். எனவே யாரும் ஓரங்கட்டப்பட்ட மாட்டார்கள் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்கு  தேசிய அளவிலான கண்டுபிடிப்பு மற்றும் ரோபோட்டிக்ஸ் போட்டியை நிறைவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

நேற்று, சிந்தோக்கில் உள்ள வட மலேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அன்வாருடன் சந்திப்பு எனும் நிகழ்வில் பேசிய பிரதமர், உயர் கல்விக் கூடங்களில் கல்வியில் மலாய் மற்றும் பூமிபுத்ரா ஒதுக்கீட்டு முறை பராமரிக்க வேண்டும் , அதே வேளையில் மிக வறுமையில் உள்ள இந்தியர்கள் மற்றும் சிறப்பான  தேர்ச்சிகளை  கொண்ட  எல்லா இன மாணவர்களையும்  உள்ளடக்கிய  ஒரு  முறையை கையாள வேண்டும்  என்று கூறியிருந்தார்.


Pengarang :