SELANGOR

ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுவதைத் தவிர்க்க நடப்பு அரசாங்கத்தை ஆதரிப்பீர்- அமிருடின் கோரிக்கை

கோல சிலாங்கூர், ஜூலை 13- மக்கள்
பிளவுபடுவதைத் தடுக்க பக்காத்தான்
ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல்
ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி மாநில
அரசை அமைக்க உதவுமாறு வாக்காளர்கள்
கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பொறுப்பற்ற தரப்பினரிடமிருந்து
மாநிலமும் நாடும் காப்பாற்றப்படுவதை
உறுதிசெய்ய தற்போதுள்ள அரசாங்கத்திற்குத் தொடர்ந்து
ஆதரவு கொடுப்பது முக்கியம் என்று
சிலாங்கூர் ஹராப்பான் தலைவர்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அவர்களுக்கு நாம் இடம் (வாக்குகள்)
கொடுத்தால் தற்போது நிலவி வரும்
ஒற்றுமையை அழிக்க நாமே அவர்களுக்கு
இடம் கொடுத்ததாக ஆகிவிடும். நம்
நாட்டை மீட்டெடுக்க தினமும் கடுமையாகப்
பாடுபடும் புத்ராஜெயாவை அழிக்க
அவர்கள் நினைக்கிறார்கள்.

எனவே, அனைவரின் ஒத்துழைப்பையும்
வேண்டுகிறேன். பொதுவான நிலையைக்
கண்டறிய நாமும் குழுவாகச் செயல்பட
வேண்டும். கடவுள் விரும்பினால், நாம் சாதித்ததைத் தொடர முடியும் என்று அவர் சொன்னார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற பெர்மாத்தாங்
தொகுதி நிலையிலான மடாணி தேர்தல்
பேரணியில் பேசியபோது மாநில மந்திரி
புசாருமான அவர் இதனைத் தெரிவித்தார்.

வெற்றியைத் தொடர்வதற்கு ஏதுவாக
தற்போதுள்ள நிர்வாகத்தை வலுப்படுத்தும்
வகையில் ஹராப்பான் மற்றும் பாரிசான்
கூட்டணிகள் நடப்புத் தொகுதிகளைத்
தற்காக்க தேர்தல் இயந்திரத்தை முழுவீச்சில்
களமிறக்க வேண்டும் என்றும் அவர்
கேட்டுக் கொண்டார்.

இந்த முறை நாம் எதிர்கொள்ளும் சவால் எளிதானது அல்ல.
ஏனென்றால் நாங்கள் எங்களுக்குத்
தெரிந்தவர்களுடன் களம்
காண்கிறோம். முன்னாள் தலைவர்கள்
மற்றும் நண்பர்கள் அங்கு உள்ளனர்.
ஆனால் நாட்டின் நலனுக்காக நாம்
காப்பாற்றப்பட வேண்டும் என்று அவர்
கூறினார்.

கடந்த 14வது பொதுத் தேர்தலில்
ஹராப்பான் கூட்டணி சிலாங்கூரில் 51
இடங்களை வென்றது. தேசிய முன்னணிக்கு
நான்கு இடங்களும் பாஸ் கட்சிக்கு ஒரு
இடமும் கிடைத்தன.


Pengarang :