SELANGOR

அக்வாபோனிக்ஸ் திட்டம் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த விரிவுபடுத்தப்படும்

உலு லங்காட், ஜூலை 17: மீன் வளர்ப்பு மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் நுட்பங்களை ஒருங்கிணைக்கும் அக்வாபோனிக்ஸ் திட்டம், குறைந்த வருமானம் கொண்ட குழுக்களின் (B40) பொருளாதாரத்தை மேம்படுத்த சிலாங்கூரில் பல பகுதிகளில் விரிவுபடுத்தப்படும்.

சிப்பாங், காஜாங் மற்றும் கோலா லங்காட் ஆகிய இடங்களில் இந்தத் திட்டம் தொடங்கப் பட்டதாகப் பசுமைத் தொழில் நுட்பத் துறையின் பொறுப்பு உறுப்பினர் கூறினார். இத்திட்டம் கெளுத்தி மற்றும் திலாப்பியா போன்ற மீன் வகைகளையும் காய்கறிகளையும் வளர்க்கும் குழுகளுக்கு உதவியது.

“மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களைச் சுற்றி அக்வாபோனிக்ஸ் திட்டத்தை தொடங்கினோம், ஏனெனில் இதுபோன்ற திட்டத்திற்கு அவர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

“இந்த திட்டம் சிறந்த முடிவுகளைக் காட்டுகிறது. எனவே, இத்திட்டம் குறிப்பாக பயன்படுத்தக்கூடிய காலியான பகுதிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் விரிவாக்கப்படும்” என்று ஹீ லாய் சியான் கூறினார்.

இங்குள்ள சுங்கை சுவா சீனத் தேசிய வகைப் பள்ளியில் 20,000 ரிங்கிட் ஒதுக்கீட்டில் எட்டு சோலார் விளக்குக் கம்பங்களை நிறுவும் நிகழ்வு முடிவடைந்த பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவசாயத்தில் உள்ள தொழில்நுட்பங்களில் அக்வாபோனிக்ஸ் என்ற முறை மீன் வளர்ப்பு மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் (நீர் சார்ந்த விவசாய முறை) ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.

கூடுதலாக, அக்வாபோனிக் தாவரங்களும் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதில்லை, மாறாக வளர்க்கப்படும் மீன்களின் கழிவுகளிலிருந்து உரங்களைப் பெறுகின்றன.


Pengarang :