NATIONAL

நான் யாரையும் ஒடுக்க மாட்டேன்- சிறை வாழ்க்கை பற்றி எனக்கும் தெரியும்- அன்வார்

தஞ்சோங் காராங், ஜூலை 20 – எதிர்க்கட்சிகளை சேர்ந்த தனிநபர்கள்  உட்பட யாரையும் நான் ஒருபோதும் ஒடுக்க மாட்டேன் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

சிறை வாழ்க்கை எப்படி இருக்கும்  என்று தனக்கு தெரியும் என்றும் தன்னிச்சையாக பிரதமர் பதவியை பயன்படுத்த மாட்டேன் என்றும் அன்வார் கூறினார்.

அப்படிச் செய்தால் நான் விமர்சிக்கப்படுவேன். நான் நீண்ட காலத்திற்கு முன்பே நடவடிக்கை எடுத்திருப்பேன். சில நேரங்களில், நான் என் கோபத்திற்கு அடிபணிந்திருந்தால் நானும் சிறையில் இருந்திருப்பேன். ஆனால் நான் ஒரு போதும் அவ்வாறு செய்யவில்லை. ஏனெனில் இந்த நாட்டில் சட்டங்கள் உள்ளன என்று அவர் சொன்னார்.

அவர்கள் பாஸ் அல்லது பெர்சாத்துவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நான் அவர்களை ஒடுக்க மாட்டேன். ஏனென்றால் சிறையில் அடைக்கப்படுவது எவ்வளவு துன்பகரமானது  என்பதை நான் அறிவேன் என்று அவர் நேற்றிரவு கம்போங் ராஜா மூசாவில் நடந்த தஞ்சோங் காராங் மால் ஹிஜ்ரா 1  கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு  கூறினார். இந்நிகழ்வில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார்.

சிலாங்கூர் மந்திரி புசார் நியமனம் மற்றும் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது தொடர்பில் சிந்தனைக்குரிய கருத்துகளை வெளியிட்டது தொடர்பாக கெடா மந்திரி புசார்  டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் மீது ஜூலை 18ஆம் தேதி  செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரண்டு  குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது தொடர்பில்  பிரதமர் இவ்வாறு கருத்துரைத்தார்.


Pengarang :