NATIONAL

தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவும் பிங்காஸ் திட்டம்

ஷா ஆலம், ஜூலை 20 – சிலாங்கூர் மக்கள் நலவாழ்வுத் திட்டத்தின் வழி (பிங்காஸ்) மாநில அரசு வழங்கும் மாதாந்திர உதவித் தொகையான 300 வெள்ளி சிலருக்குச் சிறியதாகத்
தோன்றலாம், ஆனால் இங்குள்ள ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு இது பெரும் உதவியாக
இருக்கிறது.

56 வயதான கம்சியா மாட் அலி, கடந்த ஆண்டு முதல் தனக்குக் கிடைத்து வரும் இந்த
உதவியால் முன்பு இருந்ததை விட இப்போது அடிப்படைத் தேவைகளை ஈடு செய்ய
முடிகிறது என்று கூறினார்.

என்னுடைய மாதச் சம்பளம் 350 வெள்ளி மட்டுமே. குடும்பத்தினருக்கான உணவுத் தேவையை ஈடு செய்ய இது போதுமானது அல்ல.

இந்த பிங்காஸ் உதவியின் மூலம் நான் இப்போது அத்தியாவசியப் பொருள்களை வாங்குவது மட்டுமல்லாமல் எனது இரண்டு பிள்ளைகளின் கல்விக்கும் உதவ முடிகிறது என்று தனித்து வாழும் தாயான அவர் பெர்னாமாவிடம் கூறினார் .

சிலாங்கூரில் மாதம் ஒன்றுக்கு 3,000க்கும் குறைவாக வருமானம் பெறும் சுமார் 27,000 பிங்காஸ் பயனாளிகளில் கம்சியாவும் ஒருவராவார்.

இதற்கிடையில், மாநில சமூக-பொருளாதார மேம்பாடு, சமூக நலன் மற்றும் தொழிலாளர்கள் திறன் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறுகையில், சிலாங்கூர் அரசாங்கம் இந்த ஆண்டு சிலாங்கூரில் உள்ள 30,000 குடும்பங்களுக்கு உதவி நிதியை வழங்குவதற்காக 10 கோடியே 80 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாகக் கூறினார்.

கடந்த 2022 ஜூலை 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம், காசே ஈபு ஸ்மார்ட் சிலாங்கூர் (கிஸ்) மற்றும் கிஸ் ஐ.டி. எனப்படும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான
திட்டம் ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.

முன்பு 200 வெள்ளியாக இருந்த இத்திட்ட பயனாளிகளுக்கான உதவித் தொகை தற்போது 300 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்ட பயனாளிகளின் எண்ணிக்கையும் 25,000 பேரிலிருந்து 30,000 பேராக ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று கணபதிராவ் கூறினார்.


Pengarang :