SELANGOR

ஸ்ரீ மூடாவில் மாதம் இரு முறை மலிவு விற்பனை நடத்த நடவடிக்கை- கவுன்சிலர் ராமு தகவல்

ஷா ஆலம், ஜூலை 24- சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு
விற்பனையை தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் குறைந்த பட்சம் மாதம் இரு
முறை நடத்துவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் என்று ஷா
ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் கூறினார்.

இந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் பி40
தரப்பினர் பயன்பெறும் வகையில் இந்த மலிவு விற்பனையை அதிக
முறை நடத்த தாங்கள் எண்ணம் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

எனினும், சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.)
வழங்கும் தேதியைப் பொறுத்து இந்த விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்படும்
என்று இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் நேற்று நடைபெற்ற
மலிவு விற்பனையின் போது அவர் குறிப்பிட்டார்.

இந்த விற்பனையை வார நாட்களை விட வார இறுதியில் நடத்தவே
நாங்கள் விரும்புகிறோம். அதிகமான பொது மக்கள் குறிப்பாக
இல்லத்தரசிகள் இந்த விற்பனையில் பங்கு கொள்வதற்கு இதன் மூலம்
வாய்ப்பு கிட்டும் என்று மேலும் சொன்னார்.

நேற்று தாமான் ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற மலிவு விற்பனைக்கு பொது
மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்ததாகவும் ராமு கூறினார்.
இந்த விற்பனையின் போது இரண்டே மணி நேரத்தில் 500 கோழிகள், 300
தட்டு முட்டை, 300 பாக்கெட் அரிசி விற்றுத் தீர்ந்தன.

இந்த விற்பனை காலை 10.00 மணிக்குத் தொடங்கிய போதிலும் 8.00
மணிக்கே 300 வரிசை எண்களும் வழங்கப்பட்டு விட்டன என்றார் அவர்.

இந்த விற்பனையில் ஒரு முழு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு
முட்டை 10.000 வெள்ளிக்கும் கெம்போங் மீன் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ
அரிசி 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது. சந்தையை விட குறைவான விலையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கும் இந்த விற்பனையில் பங்கு பெறுவதற்குரிய வாய்ப்பினை இந்தியர்கள் நழுவி விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :