SELANGOR

பந்திங் சிலம்பக் கழக உறுப்பினர்களுடன் பந்திங் பக்கத்தான் வேட்பாளர் பாப்பாராய்டு சந்திப்பு

பந்திங், ஜூலை 28- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநிலத்
தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் பந்திங் தொகுதியில்
போட்டியிடவிருக்கும் வீ.பாப்பாராய்டு பந்திங் சிலம்ப கழகத்தினர் மற்றும்
வட்டார இளைஞர்களுடன் நேற்று முன்தினம் சந்திப்பு நடத்தினார்.

சிலாங்கூர் மாநில சிலம்பக் கழக ஏற்பாட்டில் இங்குள்ள ஜென்ஜாரோமில்
நடைபெற்ற இந்நிகழ்வில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரும் கோத்தா
கெமுனிங் தொகுதிக்கான நடப்பு சட்டமன்ற உறுப்பினருமான
வீ.கணபதிராவும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாப்பாராய்டு, பந்திங் தொகுதியில் பக்கத்தான்
ஹராப்பான் சார்பில் முதன் முறையாகத் தாம் களம் காண்பதாகக்
கூறினார். இந்த தேர்தலில் தொகுதி மக்களின் ஒத்துழைப்பு மற்றும்
ஆதரவை தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

மக்கள் வழங்கும் ஆதரவின் மூலமே மத்தியிலும் மாநிலத்திலும்
பக்கத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் ஒற்றுமை அரசாங்கம்
தொடர்ந்து நீடிப்பதற்குரிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர்
குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு
உறுப்பினருமான வீ.கணபதிராவ், கடந்த 15 ஆண்டுகளாக பக்கத்தான்
அரசாங்கம் மாநிலத்தில் அமல்படுத்தியுள்ள பல்வேறு மேம்பாட்டு மற்றும்
சமூக நலத் திட்டங்கள் தொடரப்படுவதற்கு இத்தேர்தலில் மக்களின்
ஒருமித்த ஆதரவு தங்களுக்கு பெரிதும் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.

சிலம்பக் கழகத் தலைவர் சி.சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த
நிகழ்வில் எழுபதுக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து
கொண்டதாக சிலாங்கூர் மாநில சிலம்பக் கழகத்தின் நுட்பக்குழுத்
தலைவர் டத்தோ சிவக்குமார் கூறினார்.

இந்த நிகழ்வில் சிலாங்கூர் மாநிலச் சிலம்பக் கழகத்திற்கு நிலம் மற்றும்
கட்டிடம் நிர்மாணிப்பதற்கு மானியம் கோரி மனு ஒன்றும்
பாப்பாராய்டுவிடம் சமர்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சபா மாநிலத்தில் சிலம்பக் கழகத்திற்கு ஒரு ஏக்கர் நிலமும் கட்டிடம்
நிர்மாணிப்பதற்கும் நிதியும் அம்மாநில அரசு வழங்கியுள்ளது. அதே போல்
ஜொகூர் மாநில அரசும் ஒரு ஏக்கர் நிலத்தை சங்கத்திற்கு வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் சிலாங்கூர் மாநில அரசிடமிருந்தும் சங்கத்திற்கு
நிலமும் மானியம் எதிர்பார்க்கிறோம் என்று சங்கத்தின் மத்திய
செயலவை உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.


Pengarang :