SELANGOR

சிகாமாட் தொகுதி தேர்தல் முடிவுக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு ஆக.1ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

புத்ராஜெயா, ஜூலை 28 – பதினைந்தாவது பொதுத் தேர்தலில் சிகாமாட்
நாடாளுமன்றத் தொகுதியின் முடிவுகளை எதிர்த்து பாரிசான் நேஷனல்
வேட்பாளர் டான்ஸ்ரீ எம். ராமசாமியின் செய்து கொண்ட மேல்முறையீட்டு மனு
மீதான விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு கூட்டரசு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடுமையான ஒற்றைத் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் காரணமாக வழக்கறிஞர்
டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா மருத்துவ விடுப்பில் இருப்பதாக இணை வழக்கறிஞர் சாரா மாலினி நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து டத்தோ ஜபரியா முகமட் யூசோப்
தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரணையை ஒத்திவைத்தது.

டத்தோஸ்ரீ ஹஸ்னா முகமது ஹாஷிம் மற்றும் டத்தோ மேரி லிம் தியாம் சுவான் ஆகியோருடன் இந்த வழக்கைச் செவிமடுக்கும் நீதிபதி ஜபரியா, ஆகஸ்டு 1ஆம்
தேதி நேரில் ஆஜராவதன் மூலம் இந்த மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படும்
என்றார்.

இன்று இணையம் வாயிலாக வழக்கைச் செவிமடுத்த நீதிபதிகள்,
தடுமாறி விழுவதைத் தவிர்க்க நடமாடுவதைக் குறைத்துக்
கொள்ளுமாறு ஷாபிக்கு அறிவுரை கூறினர்.

தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான கூட்டரசு மூத்த வழக்கறிஞர் சுசானா ஆத்தான் மற்றும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஆர்.
யுனேஸ்வரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லாவ் யி லியோங் ஆகியோர்
இந்த வழக்கு ஒத்திவைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில்பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்
யுனேஸ்வரன் 5,669 வாக்குகள் பெரும்பான்மையில் ராமசாமி, பெரிக்காத்தான் நேசனல் வேட்பாளர் பி. பூபாலன் மற்றும் பெஜுவாங் வேட்பாளர் சைட் ஹைரூல் ஃபைசி
ஆகியோரைத் தோற்கடித்தார்.

இதையடுத்து சிகாமாட் தொகுதிக்கான நாடாளுமன்றத் தேர்தல் செல்லாது என்றும், யுனேஸ்வரன் முறையாக எம்.பி.யாக தேர்வு செய்யப்படவில்லை என்றும் அறிவிக்கக்
கோரி ராமசாமி மனு தாக்கல் செய்தார்.

தேர்தல் அதிகாரி, யுனேஸ்வரன் மற்றும் தேர்தல் ஆணையத்தை அவர் பிரதிவாதிகளாக
பெயர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி, தேர்தல் நீதிமன்ற நீதிபதி முகமது
ரட்ஸி அப்துல் ஹமீட் பிரதிவாதிகள் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்டு, ராமசாமியின் தேர்தல் மனுவை தள்ளுபடி செய்தார்.


Pengarang :